Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM

வாட்ஸ்அப், யூ-டியூப், பேஸ்புக், ட்விட்டருக்கு தடையா? :

சமூக வலைதளங்களுக்கான மத்திய அரசின் புதிய ஒழுங்கு விதிமுறைகளை ஏற்றுக் கொள்வதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது. வாட்ஸ்அப், யூ-டியூப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் இதுவரை பதில் அளிக்காத நிலையில் அவற்றுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசின் மின்னணு,தகவல்நுட்ப அமைச்சகம் கடந்த பிப்ரவரியில் புதிய ஒழுங்கு விதிமுறைகளை அறிவித்தது. ‘தகவல் தொழில்நுட்பம் (டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை) விதிகள் 2021' என்று பெயரிடப்பட்ட இந்த விதிகள் கடந்த பிப்ரவரி 25-ல் அரசாணையாக வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனமும் மாதம் ஒருமுறை எவ்வளவு புகார்கள் வருகின்றன என்பதுதொடர்பான முழுமையான தகவல்களை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். புகார்களை கையாள ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனமும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஆபாச புகைப்படங்கள் குறித்து புகார் அளித்த 24 மணி நேரத்துக்குள் அவற்றை சமூக வலைதளத்தில் இருந்துநீக்க வேண்டும். முறையான புகார்கள் தொடர்பாக 36 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறான தகவலை பரப்பக்கூடிய முதல் நபர் யார் என்பதை கண்டறிந்து மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.இந்த விவகாரத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யப்படும். அரசோ, நீதிமன்றமோ தகவல்களை கேட்கும்போது கண்டிப்பாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள சமூக வலைதளங்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கெடு நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த பின்னணியில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வாட்ஸ்அப், யூ-டியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் நிர்வாகங்கள் புதிய விதிகள் தொடர்பாக இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை.

புதிய விதிகளை ஏற்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றுமத்திய அரசு வட்டாரங்கள் எச்சரித்துள்ளன. இதன்காரணமாக இவற்றுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

பேஸ்புக் விளக்கம்

இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘‘இந்திய அரசின் புதிய ஒழுங்கு முறைகளை ஏற்று செயல்பட நாங்கள் விரும்புகிறோம். இதுதொடர்பாக அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்கள் வலைதளம் மூலம்மக்கள் சுதந்திரமாக, பாதுகாப்பாக கருத்துகளை பதிவிட பேஸ்புக் நிர்வாகம் உறுதி பூண்டிருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவை பேஸ்புக் நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் ஆகும்.

ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய நிர்வாகிகள் இதுவரை எவ்வித விளக்கமும் வெளியிடவில்லை. விவசாயிகள் போராட்டம் முதல் தற்போதைய கரோனா டூல்கிட் வரை பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிர்வாகத்துக்கும் கசப்புணர்வு நீடித்து வருகிறது. கூகுள் நிறுவனத்தின் யூ-டியூப் நிர்வாகமும் புதிய விதிகள் தொடர்பாக பதில் அளிக்கவில்லை.

இந்தியாவில் 53 கோடி பேர்வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். யூ-டியூபை 44.8 கோடி பேர், பேஸ்புக்கை 41 கோடி பேர், இன்ஸ்டாகிராமை 21 கோடி பேர், ட்விட்டரை 1.75 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து வலைதள நிறுவனங்களும் மத்திய அரசோடு இணக்கமாக செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x