Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை :

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒடிசா, ஆந்திரா, மேற்குவங்கம் மாநிலங்களின் முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று புயலாக உருவானது. இந்தப் புயலுக்கு ‘யாஸ்’ என்று ஏற்கெனவே பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்தப் புயல் ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து தெற்கு - தென்கிழக்கில் 540 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், 26-ம் தேதி (நாளை) ஒடிசா - மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 155 முதல் 165 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கொல்கத்தா வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் சஞ்சீப் பந்தோபாத்யாய் தெரிவித்தார்.

புயல் காரணமாக ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேரிடர் மீட்புப் படையினரும் தயார் நிலையில் உள்ளனர். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது, தாழ்வான பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், ‘யாஸ்’ புயலால் பாதிப்புக்கு உள்ளாகும் ஒடிசா, ஆந்திரா, மேற்குவங்கம், ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் துணைநிலை ஆளுநர் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். அந்த மாநிலங்களில் எடுக்கப் பட்டுள்ள முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.

புயல் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவுகளில் தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினார். வெண்டிலேட்டர் செயல்பாடு மற்றும் ஆக்சிஜன் விநியோகம் ஆகியவையும் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், மற்ற மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் விநியோகம் செய் கின்றன. அவற்றின் பாதுகாப்புக்கு முக்கியத் துவம் அளிக்க வேண்டும் என்றும் அமித் ஷா அறிவுறுத்தினார். மேலும், பேரிடர் மீட்புப் படை, துணை ராணுவப் படை, மீட்பு கருவிகள் உட்பட புயலை எதிர்கொள்ள தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்றும் உறுதி அளித்தார்.

‘யாஸ்’ என்றால் என்ன?

கடந்த ஆண்டு உருவான தாய்லாந்தால் பெயர் சூட்டப்பட்ட ‘உம்பன்’ புயலுக்கு ‘வானம்’ என்றும் வங்கதேசத்தால் பெயர் சூட்டப்பட்ட ‘நிசர்கா’ புயலுக்கு ‘இயற்கை’ என்றும் பொருள். இப்போது உருவாகியுள்ள புயலுக்கு ஓமன் நாட்டின் பரிந்துரையின்படி ‘யாஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பெர்சிய மொழியில் இருந்து உருவான வார்த்தை. ஆங்கிலத்தில் ‘ஜாஸ்மின்’ என்கிறார்கள். அதன்படி, ‘யாஸ்’ என்பது தமிழில் மல்லிகை மலரைக் குறிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x