Published : 25 May 2021 03:11 am

Updated : 25 May 2021 03:11 am

 

Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில் - 2 அமைச்சர்கள் உள்ளிட்ட 9 பேர் பேரவை உறுப்பினர்களாக பதவியேற்பு :

சென்னை

பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில் 2 அமைச்சர்கள் உட்பட 9 பேர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே 7-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.


அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை தற்காலிக தலைவராக கு.பிச்சாண்டியை ஆளுநர் நியமித்தார். அவரது தலைமையில், கடந்த மே 11-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூடியது. அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், 31 அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட புதிய எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

கரோனா பாதிப்பு

அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர் (குன்னம்), மா.மதிவேந்தன் (ராசிபுரம்), உறுப்பினர்கள் எஸ்.காந்திராஜன் (வேடசந்தூர்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), கடம்பூர் ராஜூ (கோவில்பட்டி), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), ம.வரலட்சுமி (செங்கல்பட்டு), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்) ஆகிய 9 பேரும்கரோனா பாதிப்பு காரணமாக அப்போது பதவியேற்கவில்லை. மே 12-ம் தேதி சட்டப்பேரவை தலைவராக அப்பாவு, துணைத் தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறையில் அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், மா.மதிவேந்தன் உள்ளிட்ட 9 பேரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக நேற்று பதவியேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, அரசு கொறடா கோவி.செழியன், சட்டப்பேரவை செயலர் கே.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x