Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

விமானத்தில் திருமணம் செய்த மதுரை ஜோடி - தனியார் விமான நிறுவன ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் :

கரோனா ஊரடங்கு காலத்தில், மதுரையைச் சேர்ந்த ஜோடி, விமானத்தை வாடகைக்கு எடுத்து நடுவானில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாயின.

இந்தச் சம்பவம் சர்ச்சையானதால் தனியார் விமானத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

கரோனா முழு ஊரடங்கால் மதுரை மாவட்டத்தில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த திருமண நிகழ்ச்சிகளை பலர் அவசர அவசரமாக நேற்று முன்தினமே நடத்தினர். மண்டபங்களில் நெருங்கிய உறவினர்களை அழைத்து திருமணங்களை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டிருந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த ராகேஷ் - தீக்‌ஷனா ஜோடிமதுரை விமான நிலையத்தில்விமானத்தை வாடகைக்கு எடுத்து நடுவானில் புதுமையாக திருமணம் செய்தது அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. இதற்காக மணமக்கள் வீட்டார் இரு குடும்பத்தையும் சேர்ந்த 150 பேரை அழைத்துள்ளனர்.

அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்' சான்றிதழ் பெற்று, மதுரையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக தனியார் நிறுவன சிறப்பு விமானத்தை பதிவு செய்தனர்.

இதற்காக விமான நிறுவனத்துக்கு ரூ. 8 லட்சம் வரை வாடகைக் கட்டணம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. நடுவானில் விமானம் பறந்தபோது, உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளனர். சம்பிரதாயப்படி திருமணம் நடத்த புரோகிதர்கள் சிலரையும் விமானத்தில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இத்திருமண புகைப்படங்கள், வீடியோ சமூக ஊடகங்கள், வலைதளங்களில் வைரலாயின. இவைஅதிகம் பகிரப்பட்டாலும், கரோனா முழு ஊரடங்கால் பலர் வாழ்வாதாரம் இழந்து வீடுகளில் முடங்கி உணவுக்கே திண்டாடும் நிலையில் ஆடம்பரமாக விமானத்தில் பறந்து திருமணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருமணத்தில் பங்கேற்க அதிகபட்சம் 50 பேருக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதிகமானோர் பங்கேற்றதால் கரோனா தடுப்பு விதிகளை இவர்கள் பகிரங்கமாக மீறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்தபலரும் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை.

இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை இயக்குநரகத்தின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து, தனியார் விமான நிறுவனம் விசாரணை நடத்தி, திருமணம் நடந்த விமானத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரையும் தற்காலிகப் பணி நீக்கம் செய்தது.

இதுகுறித்து மதுரை விமான நிலைய உயர் அதிகாரியிடம் கேட்டபோது, தனி நபர்கள் விமானத்தில் திருமணம் செய்வது சம்பந்தமான தகவல், விமான நிலைய அதிகாரிகள் கவனத்துக்கு வரவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடப்பதால், இதுபற்றி எதுவும் கூற முடியாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x