Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 03:10 AM

கரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் - பொதுமக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளை மக்கள்பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

கரோனா பரவலை கட்டுப்படுத் துவதற்காக தமிழகத்தில் இன்றுமுதல் ஒரு வாரத்துக்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர்ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் முதல்வர் பேசியதாவது:

தமிழகம் அனைத்து துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக மாறவேண்டும் என்பதே எமது ஆட்சியின் முழு முதல் இலக்கு. பெருந்தொற்று காலத்தில் உங்கள் மாவட்டங்களில் மருத்துவம், உள்ளாட்சிமற்றும் அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து நோய்தொற்று கட்டுப்பாடு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

கரோனா நிவாரணத் தொகை முழுமையாக மக்களுக்கு சென்றுசேர்ந்துவிட்டதா என்பதை முதலில்உறுதி செய்ய வேண்டும். தளர்வில்லா முழு ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான காய்கறி,பழங்கள், பால், குடிநீர் போன்றவற்றை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருப்பவர்களுக்கு தரமானஉணவுப் பொருட்கள், பால், குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். அனைத்து இடங்களிலும் பால், குடிநீர் விநியோகம் சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீதிகளில் வாகனம், தள்ளுவண்டிகளில் காய்கறி, பழங்கள் விற்கப்படுவதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை, உள்ளாட்சித் துறைகளின் அலுவலர்களுடன் கண்காணிக்க வேண்டும்.

மருத்துவம், உள்ளாட்சித் துறைகள் மூலமாக வீட்டுக்கு வீடு சென்று நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து நோய் தொற்றை கண்டறியும் முகாம்கள் நடத்துவது, பரிசோதனைகளை அதிகரிப்பது போன்ற பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

நோயாளிகள், நோய்த் தொற்றுஅறிகுறி உள்ளவர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றடைவதில் போக்குவரத்து சிரமம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போடும் பணிகளை தொய்வின்றி தொடர வேண்டும். நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊரடங்கு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதே நேரம், அனுமதிக்கப்பட்ட பணிகள் உதாரணமாக விவசாய இடுபொருட்கள், வேளாண் விளைபொருட்கள் ஆகியவற்றின் போக்குவரத்து எவ்வித தடையும் இல்லாமல் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

அந்தந்த மாவட்டத்தின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, அவர்களது கருத்துகளைப் பெற்றும் கட்டுப்பாடு, நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படலாம். அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவு ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பை தொடர்ந்து கண்காணித்து அவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். உங்கள் மாவட்டத்தின் நோய் தொற்று சதவீதத்தை குறைப்பதே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

இந்த காலகட்டத்தில் அரசுடன் இணைந்து செயலாற்ற பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றன. மாவட்ட அளவில் அவர்களது பணியை ஒருங்கிணைத்து, மக்களுக்கு அவர்களின் சேவையை கொண்டுபோய் சேர்க்க தனி கவனம் செலுத்த வேண்டும். அதற்கென மாவட்ட அளவில் ஒரு தனி அலுவலரையும் நியமிக்கலாம். தமிழக மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும்.

கரோனா பரவலை கட்டுப்படுத்த, அது மேலும் பரவாமல் தடுக்க அதன் சங்கிலி உடைக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்களுடன் இணைந்து கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும்போது, அதில் நாம் வெற்றி பெறுவோம் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x