Published : 23 May 2021 05:50 am

Updated : 23 May 2021 05:50 am

 

Published : 23 May 2021 05:50 AM
Last Updated : 23 May 2021 05:50 AM

‘தி கார்டியன்’: மக்கள் பத்திரிகையின் 200 ஆண்டுகள் :

உலகின் முன்னணி இதழ்களில் ஒன்றான ‘தி கார்டியன்’ தனது இருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. உலக அளவில் இவ்வளவு நெடிய காலம் செயல்படும் நிறுவனங்கள் வெகு குறைவு; அதிலும் பத்திரிகைகள் இன்னும் குறைவு. இந்தக் காலகட்டத்தில் பல நாடுகளில் புரட்சிகள், உள்நாட்டுப் போர்கள், ஸ்பானிஷ் ஃப்ளூ போன்ற பெருந்தொற்றுகள், இரண்டு உலகப் போர்கள், வல்லரசுகளின் பனிப்போர், விண்வெளிப் பந்தயம், தொலைக்காட்சி யுகம், கணினி யுகம், இணைய யுகம் ஆகியவற்றின் வரவு, உலகமயமாதல், புவிவெப்பமாதல், தற்போதைய கரோனா பெருந்தொற்று போன்ற நிகழ்வுகள் பலவற்றையும் உலகம் கண்டுவந்திருக்கிறது. இவை அனைத்தின் சாட்சியமாகவும் ‘தி கார்டியன்’ இன்றும் நம்மிடையே இருக்கிறது. ‘தி கார்டியன்’ கட்டுரைகள் பலவற்றின் மொழிபெயர்ப்புகள், 143 ஆண்டுகளைக் கடந்த ‘தி இந்து’ குழுமத்தின் ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.

‘தி கார்டியன்’ தொடங்கப்பட்டபோது அதன் பெயர் ‘தி மான்செஸ்டர் கார்டியன்’. மே 5, 1821-ல் பருத்தி வணிகர் ஜான் எட்வர்டு டெய்லரால் பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில்தொடங்கப்பட்ட வார இதழ் அது. அந்த இதழுக்குத் தாராளர்களின் ஆதரவும் பங்களிப்பும் இருந்தது. 1836-லிருந்து அந்த இதழ் வாரம் இருமுறை வெளியானது. 1855-ல் பத்திரிகைகளுக்கு முத்திரைத் தாள் கட்டணம் ஒழிக்கப்பட்ட பிறகு நாளிதழாக வெளியாக ஆரம்பித்தது.


ஸ்காட் பாரம்பரியம்

1872-ல் அந்த இதழின் ஐந்தாவது ஆசிரியராக சி.பி.ஸ்காட் பொறுப்பேற்றார். அடுத்த 57 ஆண்டுகள் அந்த இதழின் ஆசிரியராக சி.பி.ஸ்காட் இருந்து அந்த இதழை உலகப் புகழ்பெற வைத்தார். இன்றும் அந்த இதழைச் செலுத்திக்கொண்டிருக்கும் இதழியல் நெறிகளில் பல அவர் விதைத்துச் சென்றவையே. 1921-ல் ‘மான்செஸ்டர் கார்டியன்’ இதழ் நூற்றாண்டைக் கொண்டாடியபோது அவர் எழுதிய கட்டுரை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில்தான் ‘கருத்துகளுக்குச் சுதந்திரம் உண்டு. ஆனால், உண்மைதான் புனிதமானது’ என்ற வாசகத்தை எழுதியிருந்தார். இந்த வாசகம் அந்த இதழின் கருத்துப் பக்கங்களில் இன்றும் இடம்பெற்றிருக்கிறது. நேர்மை, தூய்மை, துணிவு, நியாயவுணர்வு, வாசகர்களுக்கும் சமூகத்துக்கும் கடப்பாடு உடையதாக இருத்தல் போன்றவற்றை அந்த இதழின் விழுமியங்களாக சி.பி.ஸ்காட் நிலைநிறுத்தினார். தொடக்கத்தில் மத்தியதர வர்க்கத்தின் குரலாக இருந்த ‘தி கார்டியன்’ இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடு இடதுசாரியாக உருவெடுத்தது. என்றாலும், அனைத்துத் தரப்பினரின் குரலுக்கும் ‘தி கார்டியன்’ மதிப்பளித்துவந்திருக்கிறது. எதிர்த் தரப்பினரின் கருத்துகளை சகித்துக்கொள்ள முடியாதவர்களாக இன்று நாம் ஆகிவிட்டோம். “நண்பர்களின் குரல் கேட்கப்படுவதைப் போல எதிர்த் தரப்பினரின் குரல்களுக்கும் கேட்கப்படுவதற்கு உரிமை இருக்கிறது. வெளிப்படையாக இருப்பது நல்லது; நியாயமாக இருப்பது அதைவிட நல்லது” என்று சி.பி.ஸ்காட் கூறியது இந்தக் காலத்துக்கு மிகவும் பொருந்தும்.

நிறுவனரின் குடும்பத்திடமிருந்து 1907-ல்அந்த இதழை சி.பி.ஸ்காட் வாங்கினார். 1932-ல்சி.பி.ஸ்காட் மரணமடைந்தார். 1936-ல் ஸ்காட் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் கீழே இந்த இதழ் கொண்டுவரப்பட்டது. ‘மான்செஸ்டர் கார்டியன்’ இதழை அதன் நிறுவனர் தொடங்கும்போது வணிக சமரசங்கள், பணப் பற்றாக்குறை இல்லாமல் அந்த இதழ் நீடித்து நிலைக்க வேண்டும் என்று விரும்பினார். சி.பி.ஸ்காட்டின் விருப்பமும் அதுவே. ஆகவே, ‘மான்செஸ்டர் கார்டியன்’ இதழின் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதையும் அது நீடித்து நிலைப்பதையும் ஸ்காட் அறக்கட்டளை உறுதிசெய்தது.

இதழ் தொடங்கி 138 ஆண்டுகள் கழித்து 1959-ல்அதன் பெயர் ‘தி கார்டியன்’ என்று மாற்றப்பட்டது. சர்வதேச அளவில் புகழ் பெற்ற அந்த இதழ் பெயரளவில் (‘மான்செஸ்டர்’ கார்டியன்) உள்ளூர்த்தன்மையுடன் இருந்ததே இந்தப் பெயர் மாற்றத்துக்குக் காரணம். அதேபோல், மான்செஸ்டரில் மட்டும் அச்சாகிவந்த அந்த இதழ் 1961-லிருந்து லண்டனிலும் அச்சாக ஆரம்பித்தது.

இணையத்தில் சாம்ராஜ்ஜியம்

1990-களில் உலகமயமாதல், இணையம் ஆகியவற்றின் வரவுக்கு ‘தி கார்டியன்’ முகம் கொடுக்க வேண்டியிருந்தது. 1999-ல் அந்த இதழின் இணையதளம் தொடங்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு மாதமும் அந்த இணையதளத்துக்கு 3.5 கோடிக்கும் மேற்பட்டோர் வருகைபுரிகின்றனர். உலகிலேயே இணையத்தில் அதிகம் பேரால் படிக்கப்படும் பத்திரிகைகளுள் ஒன்றாக ‘தி கார்டியன்’ இருக்கிறது. ‘தி நியூயார்க் டைம்ஸ்’ போன்ற பிரபல இதழ்களையெல்லாம் கட்டணம் செலுத்திதான் படிக்க வேண்டும் என்ற நிலையில் ‘தி கார்டியன்’ தன்னுடைய வாசகர்களுக்குக் கட்டணமின்றிப் படிக்க அனுமதி வழங்குகிறது. அதே நேரத்தில், வாசகர்கள் விருப்பப்பட்டால் ‘தி கார்டியன்’ இதழுக்கு நிதி வழங்கலாம் என்ற கோரிக்கையும் ஒவ்வொரு செய்தி, கட்டுரை போன்றவற்றின் முடிவில் வைக்கப்படுகிறது. இதன் விளைவாக, அந்த இதழுக்கு விளம்பரம் மூலம் கிடைக்கும் வருவாயைவிட வாசகர்கள் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகமாக இருப்பதாக அந்த இதழ் கூறிக்கொள்கிறது.

இணையத்தின் வருகையால் பாதிக்கப்பட்ட அச்சிதழ்களில் ‘தி கார்டியன்’ இதழும் ஒன்று. 2012-ல் அந்த இதழ் 2.08 லட்சம் பிரதிகள் விற்றதென்றால் தற்போது அதன் விற்பனை 1.08 லட்சமாக சரிந்திருக்கிறது. 2008-ல்ஸ்காட் அறக்கட்டளையானது ஸ்காட் அறக்கட்டளை லிமிட்டடாக மாற்றப்பட்டது. எனினும், ‘தி கார்டியன்’ இதழின் சுதந்திரத்தன்மைக்கு எந்த ஆபத்தும் வராது என்று உறுதியளிக்கப்பட்டது. தொடர்ந்த நஷ்டத்தை அடுத்து ஸ்காட் ட்ரஸ்ட் லிமிட்டடின் மற்ற பத்திரிகைகள், மற்ற தொழில்கள் விற்கப்பட்டன. இதன் மூலம் 83.83 கோடி பவுண்டுகள் திரட்டப்பட்டது. இதைக் கொண்டு இனி எந்த நஷ்டம் வந்தாலும் கவலைப்படாமல் ‘தி கார்டியன்’ இதழை நீண்ட காலம் நடத்தலாம் என்று அந்த நிறுவனம் கூறியது.

இதழியல் சாதனைகள்

அதிகாரமா, மக்களா என்ற கேள்வி எழும்போதெல்லாம் ‘தி கார்டியன்’ மக்கள் பக்கமே நின்றுவந்திருக்கிறது. இதனால் பல முறை அரசைப் பகைத்துக்கொள்ளவும் நேரிட்டிருக்கிறது. 1899-1902-களில் இரண்டாவது போயர் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது பிரிட்டன் முழுவதும் போர்வெறி காணப்பட்டது. அந்தக் கூச்சலுக்கு நடுவே ‘தி கார்டிய’னின் குரல் தனித்தும் நிதானமாகவும் ஒலித்தது. போர் வேண்டாம், அமைதிதான் வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது. பிரிட்டன் நடத்திய வதைமுகாம்களை அம்பலப்படுத்தியது. இதனால், ‘தி கார்டிய’னின் விற்பனை வெகுவாகச் சரிந்தது. விளம்பரங்களும் நின்றுபோயின. போட்டிப் பத்திரிகை ஒன்று ‘தி கார்டியன்’ அலுவலகத்துக்கு முன்பு வாத்திய கோஷ்டி ஒன்றை அனுப்பி இறுதிச் சடங்குக்கான இசையை வாசிக்கவைத்தது. அதையெல்லாம் தாண்டியும் ‘தி கார்டியன்’ இன்றுவரை நீடிக்கிறது. சமீபத்தில் பிரெக்ஸிட்டின்போதும் வெகு மக்களின் அதீத உணர்ச்சிக்கு எதிரான நிதானக் குரலாகவே ‘தி கார்டியன்’ ஒலித்தது.

அமெரிக்கத் தூதரகத்தின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸின் உதவியுடன் ‘தி கார்டியன்’ வெளியிட்டதற்காக 2011-ல் ’இந்த ஆண்டின் செய்தித்தாள்’ என்ற விருதை ‘ப்ரெஸ் அவார்ட்ஸ்’ அமைப்பு வழங்கியது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமையின் உலகளாவிய ரகசியக் கண்காணிப்புத் திட்டம் பற்றிய ஆவணங்களை எட்வர்டு ஸ்னோடன் 2013-ல் ‘தி கார்டியன்’ இதழிடம் ஒப்படைக்க அதை அந்த இதழ் அம்பலப்படுத்தியது. இதற்காக 2014-ன் புலிட்சர் விருது அந்த இதழுக்குக் கிடைத்தது.

‘தி கார்டிய’னின் சமூகப் பொறுப்புணர்வுக்கு மற்றுமொரு உதாரணம் பருவநிலை மாற்றத்துக்கும் புவி வெப்பமாதலுக்கும் எதிராக அது முன்னெடுத்த பிரச்சாரம். இவற்றைப் பற்றிய சிறப்புக் கட்டுரைகள், செய்திகள் என்று தொடர்ந்து வெளியிட்டார்கள். அதுமட்டுமல்லாமல் பில் கேட்ஸ்-மெலிண்டா அறக்கட்டளை போன்று எண்ணெய் நிறுவனங்களில் அதிகமாக முதலீடு செய்தவர்களை அந்தநிறுவனங்களிலிருந்து தங்கள் முதலீடுகளை விலக்கிக்கொள்ளும்படி ‘தி கார்டியன்’ கேட்டுக்கொண்டது. அப்போது, ‘தி கார்டியன்’ இதழின் உரிமையாளர்களான ஸ்காட் டிரஸ்ட் லிமிட்டடும் எண்ணெய் நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பது ‘கார்டியன்’ இதழின் அந்நாள் ஆசிரியர் ஆலன் ரஸ்பிரிட்ஜருக்குத் தெரியவருகிறது. முதலில் நாம் அல்லவா முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று ரஸ்பிரிட்ஜர், ஸ்காட் டிரஸ்ட் லிமிட்டடிடம் பேசி எண்ணெய் நிறுவனங்களிலிருந்து அவர்களின் பங்குகளை விலக்கிக்கொள்ளச் செய்கிறார். அப்படி விலக்கிக்கொண்ட பங்குகள் இந்திய மதிப்பில் ரூ 5,500 கோடி இருக்கும்.

சறுக்கல்கள்

‘தி கார்டிய’னின் பலங்களில் ஒன்று சுயவிமர்சனம். தனது இருநூறு ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கும்போது தான் சறுக்கிய இடங்களையும் அது வாசகர்கள் முன்னால் வைக்கிறது. 1857-ல் இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய் கலகம் பற்றி ‘தி மான்செஸ்டர் கார்டியன்’ எழுதும்போது “நாம் இயல்பாகவே உயர்ந்தவர்கள் என்பதால் இந்திய மக்களை அடக்கியாளும் நம் உரிமையின் மீதான உறுதியான நம்பிக்கையை இங்கிலாந்து நிலைநாட்ட வேண்டும்” என்று இனவெறி தெறிக்க எழுதியது. ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பற்றி “அமெரிக்காவுக்கும் உலகத்துக்கும் தீங்கான தினம்” என்று எழுதியது. 1912-ல் டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது 9-ம் பக்கத்தில் ஒரு மூலையில் அதைப் பற்றி எழுதியது; தேசிய மருத்துவ சேவையை (என்ஹெச்எஸ்) எதிர்த்து எழுதியது; பனியுகம் வரப்போகிறது என்று 1970-களில் எழுதியது என்று ‘கார்டிய’னே பல சறுக்கல்களைப் பட்டியலிடுகிறது.

இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட செய்திகள், கட்டுரைகளை இந்த இரண்டு நூற்றாண்டுகளில் ‘தி கார்டியன்’ வெளியிட்டிருக்கிறது. வாசகர்கள் குரலுக்கு மதிப்பளிக்கவும் இதழில் ஏற்பட்ட பிழைகளைச் சரிசெய்யவும் 1997-ல் ‘வாசகர்களின் ஆசிரிய’ரை (Readers’ editor) ‘தி கார்டியன்’ நியமித்தது. இவ்விஷயத்தில் ‘தி இந்து’ (ஆங்கிலம்) இதழுக்கு முன்னோடியாக ‘தி கார்டியன்’ திகழ்கிறது. 2020-ம் ஆண்டின் கணக்குப்படி அந்த இதழின் ஆசிரியர் குழுவினர், செய்தியாளர்கள், வடிவமைப்பாளர்கள், ஒளிப்பட நிபுணர்கள், சந்தைப்படுத்தல், விளம்பரப் பிரிவு போன்ற பிரிவுகளில் சுமார் 1,500 பேர் பணிபுரிந்தார்கள். பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ‘தி கார்டியன்’ அலுவலகம் வைத்திருக்கிறது.

நிறுவனர் டெய்லரில் ஆரம்பித்து சி.பி.ஸ்காட், ஆலன் ரஸ்பிரிட்ஜர் என்று பல ஆசிரியர்கள் அந்த இதழுக்கு வளம் சேர்த்ததோடல்லாமல், அதன் விழுமியங்களைக் கட்டிக்காத்திருக்கிறார்கள். அந்த வரலாற்றில் முதல் பெண்ணாகத் தற்போதைய ஆசிரியர் கேத்தரின் வைனர் இருக்கிறார். “தி கார்டியனின் அடுத்த நூற்றாண்டுக்கான திட்டம் என்ன? எங்களின் முதல் 200 ஆண்டுகளைச் செதுக்கிய விழுமியங்களால்தான் நாங்கள் இன்னமும் வழிநடத்தப்படுகிறோம். இரண்டு விஷயங்கள் அவற்றில் கூடுதலாகச் சேர்ந்திருக்கின்றன: நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தின் பகுதியாகவே நாங்கள் எப்போதும் இருப்போம்; அந்தச் சமூகமானது தற்போது உலகளாவிய ஒன்று என்பதையும் அது உலகளாவிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்பதையும் நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கேத்தரின் வைனர் ‘தி கார்டியன்’ இதழின் எதிர்காலத்தைப் பற்றிப் பேசும்போது அது நம் அனைவரின் எதிர்காலத்தைப் பற்றியதாகவும் இருக்கிறது!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

அதிகாரமா, மக்களா என்ற கேள்வி எழும்போதெல்லாம் ‘கார்டியன்’ மக்கள் பக்கமே நின்றுவந்திருக்கிறது. இதனால்,பல முறை அரசைப் பகைத்துக்கொள்ளவும் நேரிட்டிருக்கிறது!Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x