Published : 23 May 2021 05:50 AM
Last Updated : 23 May 2021 05:50 AM

தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத - முழு ஊரடங்குடன் கிராமப்புறங்களில் கூடுதல் கண்காணிப்பு தேவை : முதல்வரிடம் அனைத்துக் கட்சி குழுவினர் வலியுறுத்தல்

தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்துவதுடன், கிராமப்புறங்களில் கரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களும் முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினர்.

கரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி எம்எம்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பிறகு, அனைத்துக் கட்சி குழுவினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சி.விஜயபாஸ்கர் (அதிமுக):முதல் அலை போல கட்டுப்பாடுகளை அதிகரித்து, முழுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். ஆக்சிஜன் தேவையை ஆரம்பநிலையிலேயே கண்டறிய வேண்டும். அதிமுக ஆட்சியைப்போல காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் நோய் கண்டறியும் மையங்கள் அமைக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.

நயினார் நாகேந்திரன் (பாஜக): கரோனா தடுப்புக்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்கிறோம். தடுப்பு மருந்துகள் தேவையான அளவில் கிடைப்பதை உறுதிப்படுத்துவதுடன். கிராமப்புறங்களில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். மின் வாரிய ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.

ஜி.கே.மணி (பாமக): ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தியதால் கர்நாடகா, கேரளாவில் நோய் பரவல் குறைந்துள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். கிராமங்களில் மக்கள் கரோனா பரிசோதனைக்கு முன்வரவில்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கூடுதலாக பரிசோதனை மையங்களை அமைக்க வேண்டும்.

சதன் திருமலைக்குமார் (மதிமுக): அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

ஜவாஹிருல்லா (மமக): தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு தளர்வில்லா ஊரடங்கை அமல்படுத்தவேண்டும். ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டுதனிமைப்படுத்தலை மறு ஆய்வுசெய்ய வேண்டும். கிராமப்புறங்களில் நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதை கட்டுப்படுத்த வேண்டும்.

நாகை மாலி (மார்க்சிஸ்ட்): முழு ஊரடங்கை அமல்படுத்தும்போது ஏழை மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ராமச்சந்திரன் (இ.கம்யூ): கிராமங்களில், நடமாடும் மருத்துவ பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசு நிர்ணயித்து, கண்காணிக்க வேண்டும். கருப்பு பூஞ்சை குறித்த அச்சத்தை போக்க வேண்டும்.

ஈஸ்வரன் (கொமதேக): ஊரடங்கு கடுமையாக்கப்பட வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் சமமான அளவில் தடுப்பூசியை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்.

பாலாஜி (விசிக): கிராமப்புறங்களில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மூச்சு திணறல் பாதிப்பு உள்ளவர்களை உடனே கண்டறிய வேண்டும். வங்கிக் கடன் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும்.

தி.வேல்முருகன் (தவாக): ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். முன்களப் பணியாளர்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை வழங்க வேண்டும்.

ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்): ஊடரங்கு மிக கடுமையாக்கப்பட வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்கி அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்க வேண்டும். ரெம்டெசிவிர் தட்டுப்பாடின்றி கிடைப்பதுடன், தடுப்பூசி போடுவதற்கு குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் முதல்வரிடம் தெரிவித்ததாக அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x