Published : 21 May 2021 03:11 AM
Last Updated : 21 May 2021 03:11 AM

ம.நீ.ம. பொதுச் செயலர் குமரவேல் ராஜினாமா : தவறான ஆலோசனையே தோல்விக்கு காரணம் என கமலுக்கு கடிதம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவராக இருந்த மகேந்திரன், பொதுச் செயலராக இருந்த சந்தோஷ்பாபு, முருகானந்தம் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகினர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலர் சி.கே.குமரவேல் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக, கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

2019-ல் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து நான் விலகினாலும், தமிழகத்தில் உங்களால் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையில்தான் மீண்டும் இணைந்தேன். மக்களிடமும் அந்த மாற்றத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. கடந்த நவம்பர், டிசம்பரில் கட்சிநடவடிக்கைகளாலும், உங்கள்சுற்றுப்பயணத்தாலும் மக்களிடையே இந்த வரவேற்பும், நம்பிக்கையும் அதிகரித்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது.

அதைத் தொடர்ந்து, டார்ச்லைட் சின்னம் மீண்டும் கிடைத்தபோதும், ரஜினிகாந்த் அரசியலுக்குவரப் போவது இல்லை என்று அறிவித்த போதும் மய்யத்தின் மீதான மக்களின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் பிரகாசமானது.

ஆனால், நமக்கான வாய்ப்புகளை நாம் இழந்துவிட்டோம். எதிர்க்கட்சியில் அமரவேண்டிய தகுதிகள் இருந்த போதும், ஒரு தொகுதியில்கூட நம்மால் வெற்றி பெற முடியவில்லை.

உங்கள் அரசியல் ஆலோசகர்களும், அவர்களது தவறான வழிநடத்தலும்தான் இந்த தோல்விக்குகாரணம். ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் போதும் என்ற அவர்களது குறுகிய எண்ணமும், செயல்பாடுகளும்தான் நம் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பை தகர்த்துவிட்டது.

தனிமனித பிம்பத்தை மட்டுமே சார்ந்து இருக்கிற அரசியலைவிட, மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் பாதையில் பயணிக்க விரும்புகிறேன். எனவே, மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து விலகுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x