Published : 21 May 2021 03:11 AM
Last Updated : 21 May 2021 03:11 AM

கோவையில் கரோனா நோயாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட - 1,180 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு :

கோவையில் கரோனா நோயாளிகளுக்காக கொடிசியா கரோனா சிகிச்சை மையம், குமரகுரு கல்லூரிகரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றில் புதியதாக, கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட 1,180 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, கோவையில் கரோனா தொற்று பரவலின் வேகம் அதிகளவில் உள்ளது. தினமும் 3,200-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர், சுகாதாரத் துறையினருடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்ய, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவைக்கு வந்தார். கோவை அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வந்த முதல்வர், கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜனுடன் ஆலோசனை நடத்தினர்.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, தொற்று பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் தேவைநிலவரம் போன்றவை குறித்துகேட்டறிந்த முதல்வர், தொற்றுபரவலைத் தடுக்க பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்டஆட்சியரிடம் கூறி நடைமுறைப்படுத்த உத்தரவிட்டார்.

சிகிச்சை மையங்கள் ஆய்வு

அதன் பின்னர், கொடிசியா வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள, கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொடிசியா கரோனா சிகிச்சை மையத்தில் முன்னரே 676 படுக்கை வசதிகள் இருந்தன. தற்போது கூடுதலாக அங்கு 820 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை போன்றவை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், அருகேயுள்ள குமரகுரு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனாசிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அங்கு கரோனா நோயாளிகளுக்காக 360 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதை பார்வையிட்ட முதல்வர், அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிகிச்சை வசதிகள், நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கொடிசியா கரோனா சிகிச்சை மையம், குமரகுரு கல்லூரி சிகிச்சை மையம் ஆகியவற்றை சேர்த்து மொத்தம் 1,180 படுக்கைவசதிகள் புதியதாக ஏற்படுத்தப்பட்டிருந்ததை முதல்வர் நேற்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வுகளின்போது, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி, வி.செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ், கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன், மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர், சுகாதாரத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x