Last Updated : 19 May, 2021 03:12 AM

 

Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

கணவன் - மனைவி நேசிப்பை நொடிக்கு நொடி உணர்த்திய - ஆதர்ஷ தம்பதி கி.ராஜநாராயணன் - கணவதி அம்மாள் :

மனைவி கணவதி அம்மாளுடன் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

புதுச்சேரி

புதுச்சேரி லாஸ்பேட்டை உழவர் சந்தைக்குப் பின்புறம் உள்ள எளிமையான அரசு குடியிருப்பில் ராஜா போல் வாழ்ந்தவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

எப்போது சென்றாலும் ஏதாவதுஎழுதியபடி இருப்பார். உரையாடவும் வரிசையாக பலரும் வந்தபடிஇருப்பார்கள். இதற்கு நடுவிலும், அவரும் அவரது மனைவி கணவதி அம்மாளும் ஏதேனும் ஒரு விஷயம் குறித்த கருத்துகளை பரிமாறிக் கொண்டே இருப்பார்கள். 2 ஆண்டுகளுக்கு முன் கி.ரா.வின் மனைவி இயற்கை எய்த, அந்த ஆழமான சிநேகத்தை அவர் பிரிய நேர்ந்தது.

செப்.16 - மறக்க முடியாத நாள்

கி.ரா - கணவதி அம்மாள் தம்பதிக்கு செப்டம்பர் 16 - மறக்க முடியாத நாள். அவர்களின் திருமண நாளும், கி.ரா.வின் பிறந்தநாளும் ஒரே நாள் என்பதால் இருவருக்கும் செப்.16 முக்கியமான நாளாகத் திகழ்ந்தது.

கி.ரா - கணவதி அம்மாளின் திருமண வாழ்க்கை தொடக்கத்தில் இலகுவாக இல்லை. 19 வயதில் திருமணமாகி வந்த கணவதிக்கு, திருமணம் ஆகும்போதே கி.ரா.வுக்கு காசநோய் (டிபி) இருக்கிறவிஷயம் தெரிந்தது. காசநோயால், கி.ரா. ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டார் என அவர் காதுபடவே பேசியதைத் தாண்டி கி.ரா.வைக் கைபிடித்தார் கணவதி அம்மாள்.

முதல் குழந்தை பிறந்து, தனதுஅம்மா வீட்டில் கணவதி இருந்தபோது சரியான கவனிப்பு இல்லாமல் குழந்தை இறந்தது. அதையடுத்து வைராக்கியத்துடன் சிறு வயதில் அடுத்த பிரசவங்களுக்கு தனது தாய் வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளார் கணவதி.

தன் கணவர் காசநோயால் வயல் வேலையை செய்ய முடியாதசூழலிலும் குடும்பப் பொறுப்பை கணவதி கையில் எடுத்தார். நள்ளிரவு ஒரு மணிக்கு குழந்தைகளுடன் சென்று வயலில் தண்ணீர் பாய்ச்சி, வயல் வேலைகளை மட்டுமில்லாமல் குடும்பப் பொறுப்பையும் கையில் எடுத்து கி.ரா.வை குழந்தை போல் பார்த்து கொண்டவர் கணவதி. அதனால் கி.ரா.வுக்கு எப்போதும் கணவதி அம்மாள் மீது ரொம்ப பாசம். தனக்கு வியாதி இருந்ததால் குழந்தைகளைக் கொஞ்சக்கூட கி.ரா.வுக்கு தயக்கமிருந்தது.

மேடையிலும் இடம் தருவார்

கி.ரா. எழுதி தரும் முதல் கையெழுத்து பிரதியைப் படிப்பது கணவதி அம்மாள்தான். புதுச்சேரி வந்த பிறகு பல நிகழ்வுகளுக்கும் தனது மனைவியுடன் இணைந்தே வருவார் கி.ரா. இலக்கிய நிகழ்வுகளில் மேடையில் அமர்ந்தாலும், தனது மனைவிக்கும் இருக்கை போட்டு பக்கத்தில் அமர வைத்து அழகு பார்த்தவர்,

முகத்தில் ஷேவ் செய்து ஜிப்பாவோடு எப்போதும் பளீரென்று காட்சி தரும் அவர், திடீரென்று கடந்த சில ஆண்டுகளில் தாடி வளர்க்கத் தொடங்கினார். சட்டை அணிவதையும் தவிர்த்தார். கி.ரா. தன் உருவ அமைப்பை எப்படி மாற்றினாலும், அதையெல்லாம் கணவதி அம்மாள் சிலாகித்துப் பேசுவதுண்டு.

மனைவியின் மீதான நேசிப்பு

‘‘திருமணமாகி வரும்போது அவளுக்கு சமைக்கத் தெரியாது.புளிச்சாறுதான் வைப்பாள். ஆச்சரியமாக சில வாரங்களிலேயே அருமையாக சமைக்கத் தொடங்கினாள். அப்படி மணக்கும்...’’ என்று ஏதேனும் ஒரு விஷயத்தை முன் வைத்து மனைவியைப் பற்றி ரசித்து பேசியபடி இருப்பார் கி.ரா.

இருவரிடமும் பேசியபோது கூறிய ஒரு வார்த்தை ‘‘எங்களுக்குள் சண்டையே வந்ததில்லை’’ என்பதுதான். மனைவியின் மீதான நேசிப்பை கி.ரா.வும், கணவர் மீதான பாசத்தை கணவதி அம்மாளும் நொடிக்கு நொடி உணர்த்தியபடியே வாழ்ந்தனர்.

கணவதி அம்மாள் இறந்த 2 ஆண்டுக்குள் தற்போது கி.ரா. அவரை தேடிச் சென்றுள்ளார். இதுவும் ஒரு காதல்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x