Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

எழுத்துகளாக உயிர் வாழும் கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் - கி.ரா. மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல் :

முதுபெரும் தமிழ் எழுத்தாளர் கி.ரா.என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இரங்கல் செய்தியில் அவர்கள் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: கி.ராஜநாராயணன் மறைவு கரிசல் மண்ணின் கதைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி. அவர் தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லி. தமிழ்த் தாய் தன் அடையாளங்களில் ஒன்றை இழந்து தேம்புகிறாள். அந்த கரிசல் குயில் கூவுவதை நிறுத்துவிட்டது. அவர் மறையவில்லை. எழுத்துகளாக உயிர் வாழ்கிறார். அவரது குடும்பத்தினர், வாசகர்கள், சக படைப்பாளிகள், தமிழர்களுக்கு என் நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சாகித்ய அகாடமி விருது பெற்றதமிழ் இலக்கியத்தின் பேராளுமையாய் பெருவாழ்வு வாழ்ந்த கரிசல்இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா.வின்புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: ஆரம்ப காலத்தில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்துவிவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றவர் கி.ரா. கரிசல்காட்டு வாழ்க்கையை படைப்புகளாக்கி ஆவணங்களாக்கியவர். இலக்கிய உலகின் மின்னும் தாரகை நூறாண்டு காணும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் உதிர்ந்துவிட்டது. அவரது படைப்புகளின் ஒளிவீச்சு அடுத்தடுத்த தலைமுறைக்கும் வழிகாட்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: இளமைக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக தீவிரமாக செயல்பட்டவர். ஜீவானந்தம், ஆர்.நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் நெருக்கமாக பழகியவர். பேச்சுவழக்கை நவீன இலக்கியத்தின் மொழியாக ஆக்கிய முன்னோடி. எளிய உழைப்பாளிகளின் பாடுகளையே அவரது அனைத்து படைப்புகளும் பேசின. ஆழ்ந்த இசைஞானம் கொண்டவர். கி.ரா.வின் மறைவு இலக்கிய உலகுக்கு பேரிழப்பு.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: வரலாற்றுச் செய்திகளை அனைவரும் படிக்கும் வகையில் எளிய நடையில், கரிசல் மண்ணின்மக்களுடைய பேச்சு வழக்கில் தந்தவர். இலக்கியத் துறையில் பேராட்சி புரிந்தவர். எழுத்தாளர்களுக்கு ஒரு செவிலித் தாயாக திகழ்ந்த அன்புப் பாசறை அவரது புதுச்சேரி இல்லம். அவரது நூற்றாண்டு விழாவை வெகுசிறப்பாக கொண்டாட தமிழ் இலக்கிய உலகம் காத்திருந்த வேளையில், அந்த கரிசல் குயில் பறந்துவிட்டது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ் இலக்கிய உலகின் ஆகச்சிறந்த கதைசொல்லி. இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார். நாட்டார் வழக்கில் அழிந்துவரும் சொற்களை தேடித் தேடி கதைகள், கவிதைகள், கட்டுரைகளில் சேர்க்க வேண்டும் என்று எழுத்தாளர்களுக்கு அறிவுறுத்தி வந்தார். மழைக்குக்கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத அவர், தனது இலக்கிய ஆளுமையால் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக பணியாற்றியவர். அவரது படைப்புகளால் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: ஒட்டுமொத்த படைப்பையும் பேச்சு வழக்கிலேயே எழுதி புதிய தடத்தை உருவாக்கியவர். கரிசல் மக்கள், அவர்களது மரபுகள், பண்பாட்டு விழுமியங்களை தன் படைப்புகள் மூலம் ஆவணப்படுத்தியவர். இளம் படைப்பாளிகளுக்கு ஊக்கமாக இருந்தார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஏழாம் வகுப்பு வரை படித்து எழுத்துலகின் உச்சத்தை தொட்டவர். இலக்கிய உலகுக்கு கரிசல்காட்டு இலக்கியம் மூலம் கால்கோள் ஏற்படுத்தியவர்.

அமமுக பொதுச் செயலாளர் தினகரன்: தமிழின் தனித்துவமான கதைசொல்லியாக, அழியாத படைப்புகளை தந்தவராக, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்ந்த கி.ரா. மறைவு தமிழுக்கு பேரிழப்பு.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா,பழ.நெடுமாறன், தமிழருவி மணியன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்டோரும் கி.ரா. மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ் இலக்கியத்துக்கு செழுமை சேர்த்த கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஏட்டறிவைக் காட்டிலும் பட்டறிவால் பல இலக்கியப் படைப்புகளைத் தந்தவர். வட்டார வழக்கு சார்ந்த இலக்கியப் படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவை போற்றும் வகையிலும், அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அவரது புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்கள், பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும். கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x