Published : 19 May 2021 03:13 AM
Last Updated : 19 May 2021 03:13 AM

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகள், குடும்பத்தினர் - வெளியே சுற்றினால் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூல் : சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வெளியே சுற்றினால் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொதுமக்களின் நலன் கருதி சென்னை மாநகராட்சி அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களில் ஒரு சிலர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியே வருவதாக புகார்கள் வருகின்றன.

இத்தகைய செயல்களால் கரோனா வைரஸ் தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார், மருத்துவரால் அறிவுறுத்தப்பட்ட நாட்கள் வரை வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருக்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறது.

இதனை மீறி வீடுகளை விட்டு வெளியில் வருபவர்களிடமிருந்து சென்னை மாநகராட்சியின் மண்டல அமலாக்க பிரிவின் மூலம் முதல் தடவையாக ரூ.2 ஆயிரம் அபராதமாக வசூலிக்கவும், இரண்டாவது தடவை மீண்டும் வீடுகளை விட்டு வெளியில் வருவது கண்டறியப்பட்டால் அவர்களை சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் கரோனா பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீடுகளை விட்டு வெளியே வரும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் குறித்த விவரங்களை அருகாமையில் வசிப்பவர்கள் மற்றும் ஏனையோர் 044-25384520 என்ற தொலைபேசி எண்ணில் புகாராக அளிக்கலாம். எனவே, கரோனா வைரஸ் தொற்று பரவலின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு செய்திக்குறிப்பில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x