Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM

இணைய வழியில் மத்திய அமைச்சர் நடத்திய - புதிய கல்விக்கொள்கை தொடர்பான கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிப்பு : மாநில அமைச்சர் பங்கேற்பது பற்றி பதில் வராததால் இந்த முடிவு என விளக்கம்

புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்துவது குறித்து மத்திய கல்வி அமைச் சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடந்த இணையவழி ஆலோசனை கூட் டத்தை தமிழக அரசு புறக்கணித்துவிட்டது. மாநில அமைச்சர் பங்கேற்க அனுமதி கேட்டு எழுதப்பட்ட கடிதத்துக்கு பதில் வராததால் கூட்டத்தை புறக்கணித்ததாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற் கொண்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை, பள்ளியில் இருந்தே தொழிற்கல்வி அறிமுகம், உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, மாநில உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் தொடக் கத்தில் இருந்தே புதிய கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. முந்தைய அதிமுக அரசும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய கல்வியாளர்கள் 7 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது.

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைமை யிலான அரசு பொறுப்பேற்றுள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே புதிய கல்விக் கொள்கையை கடுமை யாக எதிர்த்தது. இந்தச் சூழலில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மே 17-ம் தேதி அனைத்து மாநில பள்ளிக்கல்வித் துறை செயலர் கள் பங்கேற்கும் இணையவழி ஆலோ சனை கூட்டத்துக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலருக்கும் அழைப்பு விடுக் கப்பட்டிருந்தது.

ஆனால், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாநில அமைச்சர்களையும் அனுமதிக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மத்திய கல்வி அமைச்சகத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்துக்கு மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்நிலையில், மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் இணையவழி வாயிலாக நேற்று நடந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது. அந்தக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார் கலந்துகொள்ளவில்லை. மத்திய அமைச் சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித் திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திருச்சியில் செய்தி யாளர்களிடம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி நேற்று கூறியதாவது:

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மே 17-ல் (நேற்று) ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என்றும், இதில் அந்தந்த மாநில கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் மத்திய அரசு 2 தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது.

ஆனால், பள்ளிக் கல்வித் துறைக்கென மாநில அமைச்சர் உள்ள நிலையில், அதிகாரிகள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு வேட்டு வைப்பதுபோல் உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். எனவே, இக் கூட்டத்தில் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டோம். ஆனால், அதற்கு அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால், மத்திய அமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை வெளியானபோதே அதில் பல் வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந் தோம். குலக்கல்வி திட்டம், மும்மொழிக் கொள்கை ஆகியவற்றை திணிப்பதாக புதிய கல்விக் கொள்கை உள்ளது. இட ஒதுக்கீடு குறித்து அதில் குறிப்பிடப் படவில்லை. 3, 5, 8 ஆகிய வகுப்பு மாண வர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத் தும் வகையில் பொதுத் தேர்வு முறை குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய கல்விக் கொள்கையால் கிராமப்புற மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவர். எனவே, இதுபோன்று பல்வேறு பிரச்சினை களுக்கு தீர்வை அளிக்கும் வகையில்தான் திமுக தனது பரிந்துரைகளை செய்திருந்தது.

எனவே, இந்த பரிந்துரைகளை ஏற்று, புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வோம். மத்திய அரசுடன் எங் களுக்கு ஈகோ இல்லை. புதிய கல்விக் கொள்கையானது மறைமுகமாக இந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழியை திணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியை நாங்கள் ஒருபோதும் எதிர்க்க வில்லை. இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும். அதுவரை, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு ஆன்- லைன் மூலம் பாடம் நடத்த நட வடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது. பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக துறையின் முதன் மைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தி நல்ல தீர்வு எட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக்கல்வித் துறை செயலர் தீரஜ் குமாரிடம் கேட்டபோது, ‘‘ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வி அமைச்சரும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என கடந்த 15-ம் தேதியே மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், அந்த கடிதத்துக்கு பதில் கிடைக்காத கார ணத்தால் கூட்டத்தை புறக்கணித் துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x