Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ல் - மேட்டூர் அணை திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார் : 9 மாவட்ட விவசாயிகளுடன் ஆலோசித்த பிறகு அமைச்சர் துரைமுருகன் தகவல்

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி திறப்பது குறித்து தமிழக முதல்வர் உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடுவார் என மாநில நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

டெல்டா மாவட்டங்களில் சிறப்புதூர்வாரும் பணி திட்ட செயலாக்கம் மற்றும் குறுவை சாகுபடி தொடர்பாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

நகர்ப்புற வளர்ச்சித் துறைஅமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை- உழவர் நலத் துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கரூர் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

டெல்டா மாவட்டங்களின் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி திறப்பது, குறுவை சாகுபடியை சிறப்பாக மேற்கொள்வது, தூர்வாரும் பணிகள் திட்டத்தை செயல்படுத்துவது ஆகியவை குறித்து, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர்களிடம் நேரடியாக கருத்துகளை கேட்டறியும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நடைபெற்ற இக்கூட்டத்தில், மேட்டூர் அணையை உரிய நேரத்தில் திறக்க வேண்டும், தூர்வாரும் பணிகளை மேம்படுத்தி, விடுபட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் தெரிவித்த கருத்துகள், கோரிக்கைகள் அனைத்தும் முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அனைத்தும் நிறைவேற்றப்படும்.

உலகிலேயே மிகச் சிறந்த நீர்ப்பாசன முறை காவிரி டெல்டா பகுதியில் மட்டுமே உள்ளது.

இதை பராமரிப்பு செய்வதற்காக பொறியாளர்கள் உள்ளிட்டஅனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடைமடை வரை அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் விரைந்து செல்லும் வகையில், தூர்வாரும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும். இப்பணிகளை நானும், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர், சிறப்பு அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்களும் நேரில் ஆய்வு செய்து கண்காணிப்போம்.என்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மேட்டூர் அணையை ஜூன் 12-ல்திறப்பது தொடர்பாக முதல்வர் உரிய நேரத்தில் அறிவிப்பாணை வெளியிடுவார். அதேபோல, தூர்வாரும் பணி தொடர்பாக நிதித் துறைக்கு உரிய திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x