Published : 17 May 2021 03:14 AM
Last Updated : 17 May 2021 03:14 AM

18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு - தடுப்பூசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த புதுவை ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் மனு :

புதுச்சேரி

18 முதல் 45 வயதுக்கு உட்பட் டோருக்கு தடுப்பூசித் திட்டத்தை விரைந்து செயல்படுத்த புதுச்சேரி ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு அளித்துள்ளது.

புதுச்சேரி ஆளுநர் தமிழிசைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா 2வது அலையால் புதுச்சேரி மிகப்பெரும் சுகாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசோடும் தங்களோடும் இணைந்து பணியாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தயாராக இருக்கிறது.

நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்திட, மரணங்களைக் கட்டுப்படுத்திட, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வுரிமையை பாதுகாத்திட கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெற்று 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் மருத்துகள், மருத்துவக் கருவிகள், முகக்கவசம், கிருமிநாசினிகள் ஆகியவற்றிக்கு விலை கட்டுபாடும், தனியார் மருத்துவமனைகளில் மருத்துவச் சிகிச்சைக்கான கட்டணத்தையும் அரசே நிர்ணயிக்க வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள போதுமான வசதியற்றவர்களை அரசின் மூலம் கல்லூரிகள், திருமண மண்டபங்கள், சமுதாய நலக் கூடங்கள், விடுதிகள், விளையாட்டு அரங்கங்கள் ஆகியவற்றில் தங்க வைத்து அவர்களுக்கான மருத்துவதேவைகளை பூர்த்திச் செய்யலாம். மேலும் உப்பளம் இந்திரா காந்திவிளையாட்டுத் திடலில் அருகிலுள்ள மைதானத்தில் தற்காலிக சிகிச்சை மையம் தொடங்கலாம்.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குடியிருப்பு சங்கங்கள் உடன் இணைந்து காய்ச்சல் பரிசோதனை மற்றும் தொற்றால் பாதித்தவர்களின் தொடர்பு உள்ளவர்களின் கணக்கெடுப்பு ஆகியவற்றை இணைந்து செய்வதால் அந்த பகுதியில் வசிக்கும் தொற்று பாதித்தவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க முடியும்.

பரிசோதனைக்கு வரும் பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகள் செய்து தர வேண்டுகோள் வைக்கிறார்கள். தொற்றின் அறிகுறிகள் அவர்களைப் பலவீனப் படுத்துவதால் சோர்வாகவும், வெயிலின் தாக்கத்தால் மயக்கமுற்று இருக்கும் நிலையில் இருக்கின்றனர்.

அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவாழ்வு மையங்கள் மற்றும் அரசு பொது மருத்துவமனைகளில் கபசுர குடிநீர் வழங்க வேண்டும். ஊடரங்கால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள நபருக்கு 5 கிலோ அரிசியுடன் மேலும் 20 கிலோ அரிசி கூடுதலாக வழங்க வேண்டும். வங்கிகள் மூலம் நேரடியாகப் பணத்தை வழங்குவதை நிறுத்தி ரேஷன் கடைகள் மூலமாக அரிசி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு ஆளுநருக்கு அனுப்பியிருக்கும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x