Published : 17 May 2021 03:14 am

Updated : 17 May 2021 03:14 am

 

Published : 17 May 2021 03:14 AM
Last Updated : 17 May 2021 03:14 AM

நாளுக்கு நாள் கரோனா தொற்று தீவிரமடைகிறது - புதுவையில் ஒரே நாளில் 32 பேர் உயிரிழப்பு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,151 ஆனது

புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் தரையில் படுத்து சிகிச்சை பெறும் நோயாளி.

புதுச்சேரி

புதுச்சேரி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் போதிய அளவு இருப்பதாக ஒரு பக்கம் ஆளுநரும், அதிகாரிகளும் கூறினாலும் புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையி்ல் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தரையிலும் இருக்கையிலும் ஏராளமானோர் அமர்ந்து சிகிச்சை பெறுகின்றனர்.

ஒரே நாளில் அதிகபட்சமாக கரோனா தொற்றுக்கு 32 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்துள்ளது.


புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இறந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து தேசிய அளவில் 2-ம் இடத்தில் புதுச்சேரி உள்ளது. இந்நிலையில் 9,446 பேருக்கு தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 1,585, காரைக்கால் – 255, ஏனாம் – 111, மாகே - 10 பேர் என மொத்தம் 1,961 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 25 பேர், காரைக்காலில் 6 பேர், மாகேவில் ஒருவர் என இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இவா்களில் 21 பேர் ஆண்கள், 11 பேர் பெண்கள் ஆவர். இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,151 ஆகவும், இறப்பு விகிதம் 1.36 ஆகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது ஜிப்மரில் 519 பேர், கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 440 பேர், கோவிட் கேர் சென்டரில் 701 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 15,497 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 17,666 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 1,491 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 65,689 (77.73 சதவீதம்) ஆக உள்ளது.

படுக்கைகளுக்கு தட்டுப்பாடு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையும், உயர் அதிகாரிகளும் போதிய அளவில் படுக்கைகள் இருப்பதாக ஒரு பக்கம் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகள் இல்லாமல் தரையிலும், இருக்கையிலும் அமர்ந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நாள் ஒன்றுக்கு 1,500 க்கும் மேற்பட்டோர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகளுக்கு மூச்சு திணறல் அதிகளவு ஏற்படுவதால் ஆக்சிஜன் தேவைஅதிகரித்து வருகிறது. இதனா லேயே புதுச்சேரியில் உள்ள 6 அரசுமருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 590 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பின. 137 வெண்டிலெட் டர்களும் நிரம்பியுள்ளன. புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள 606 ஆக்சிஜன் படுக்கைகளும், 58 வெண்டிலேட்டர்களும் நிரம்பியுள்ளன. ஆக்சிஜன் படுக்கைக்காக காத்திருக்கும் சூழல்தான் உண்மையில் உள்ளது.

சிறப்பு படுக்கைகளை அரசு மருத்துவமனைகளில் உருவாக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x