Published : 16 May 2021 03:14 AM
Last Updated : 16 May 2021 03:14 AM

கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தகவல்

ரன்தீப் குலேரியா

புதுடெல்லி

நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.

கரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் அல்லது கரோனாவில் இருந்து மீண்டவர்கள் அதிகப்படியான ஸ்டீராய்டுமருந்துகள் எடுத்துக் கொண்டதன்காரணமாக நோய் எதிர்ப்பு சக்திகுறைந்து அவர்களை கருப்புபூஞ்சை நோய் (மியூகோர்மைகோசிஸ்) தாக்குவதாக கூறப்படுகிறது.

இந்த நோய் பாதிப்பு அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. தலைவலி, காய்ச்சல், சைனஸ் மண்டலத்தில் பாதிப்பு, கண்களுக்கு கீழ் வலி மற்றும் பகுதியளவில் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை இந்த பூஞ்சைபாதிப்புக்கு முக்கிய அறிகுறியாகும். இந்தியாவில் பலர் தற்போது உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா நேற்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் தொற்று கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது. கரோனாவுடன் சேர்ந்து கருப்பு பூஞ்சை, பாக்டீரியா போன்ற இரண்டாம் நிலை தொற்றுகளும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றன.

கருப்பு பூஞ்சை மண், காற்று மற்றும் உணவிலும் இருக்கும். அவை குறைந்த வீரியம் கொண்டவை. பொதுவாக தொற்றை ஏற்படுத்தாது. கரோனாவுக்கு முன்னர் குறைந்த அளவிலான கருப்பு பூஞ்சை தொற்றுகள் ஏற்பட்டு வந்த நிலையில், கரோனா காரணமாக தற்போது அதிக நபர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்துள்ளது.

500 பேர் பாதிப்பு

எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது 20 கரோனா நோயாளிகள் உட்பட 23 பேர் கருப்பு பூஞ்சைதொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் 400 முதல் 500-க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை தொற்றுபாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

முகம், நாசி, கண், மூளை ஆகியவற்றை இந்த தொற்று தாக்கும். கண் பார்வை பறிபோகும்ஆபத்து உள்ளது. நுரையீரலையும் இந்த தொற்று தாக்கும்.

ஸ்டீராய்டு மருந்துகளை தவறாக பயன்படுத்துவதே இந்நோய் ஏற்பட முக்கிய காரணம்.கரோனா நோயால் பாதிக்கப்பட்டு, இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகளுக்கும் அதிக ஸ்டீராய்டு எடுத்து கொள்பவர்களுக்கும் இந்த தொற்று ஏற்படும். கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படாமல் தடுக்க ஸ்டீராய்டு மருந்துகளை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x