Published : 16 May 2021 03:14 AM
Last Updated : 16 May 2021 03:14 AM

5 கோடி கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய - உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு : 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என நிபந்தனை

தமிழகத்துக்கு தேவைப்படும் 5 கோடி கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு.

இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜன.16-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கும் அடுத்தகட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி போட மக்கள் ஆர்வம்

மாநில அரசுகளுக்கு தேவையான கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்கி வருகிறது. தொடக்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களிடம் அச்சம் நிலவியது. கரோனா தொற்றின் 2-வதுஅலை தீவிரமாக பரவத் தொடங்கியதற்கு பின்னர் பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தொடங்கினர். இதனால், தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், 3-வது கட்டமாகதமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மே 1-ம் தேதி முதல்தொடங்க மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. 3-வது கட்ட தடுப்பூசி பணிகளை செயல்படுத்த அந்தந்த மாநில அரசுகளே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அதன்படி, அப்போதைய முதல்வர் பழனிசாமி, 1.50 கோடி தடுப்பூசிகளை தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்ய உத்தரவிட்டார். ஆனால் ஏற்கெனவே தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருப்பதாலும் ஆர்டர் கொடுக்கப்பட்ட 1.50 கோடிதடுப்பூசிகள் வராததாலும் கடந்த1-ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவில்லை.

நிதி ஒதுக்கீடு

இந்நிலையில், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான நிதியும் உடனடியாக ஒதுக்கீடு செய்யப் பட்டது.

அதன்படி, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டர் கோரியுள்ளது. அதில்,தமிழகத்துக்கு 5 கோடி தடுப்பூசிகளை 3 மாதங்களுக்குள் வழங்கிட வேண்டும்.

மேலும், தடுப்பூசிகளை வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் ஜூன் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x