Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM

தமிழகம் முழுவதும் கடந்த 36 நாட்களில் - முகக் கவசம் அணியாத 9.44 லட்சம் பேர் மீது வழக்கு :

தமிழகம் முழுவதும் கடந்த 36 நாட்களில், முகக் கவசம் அணியாதவர்கள் மீது 9 லட்சத்து 44 ஆயிரத்து 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கரோனா 2-வது அலை தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் நிலையில் வரும் 24-ம்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், மருத்துவ சேவைகள் மட்டும் தொடர்ந்து இயங்கும். மற்றவை காலை 10 மணிக்கு மேல் இயங்கக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இதை பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகள் வழக்கம்போல பயணித்தனர். சிறிய சாலைகளிலும், தெருக்களிலும் பொதுமக்கள் வெளியே சுற்றுவதும் அதிகம் காணப்பட்டது.

‘வாகனங்களைப் பறிமுதல் செய்யக்கூடாது, பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்’ என்று டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்ததால் காவல் துறையினர் கெடுபிடி குறைவாக இருந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஏராளமானவர்கள் தேவையின்றி சாலைகளில் சுற்றஆரம்பித்தனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சாலைகளில் தேவையில்லாமல் சுற்றியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். போலீஸார் நடவடிக்கை தீவிரமானதைத் தொடர்ந்து சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்தது.

கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த 36 நாட்களில், முகக் கவசம் அணியாதவர்கள் மீது 9 லட்சத்து 44 ஆயிரத்து 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனி மனித இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீதுதமிழகம் முழுவதும் 32,156 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் கரோனா விதிகளை மீறியதாக கடந்த 5 நாட்களில் 2,079 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கூடுதல் நேரம் கடை திறந்ததாக 64 பேர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x