Last Updated : 16 May, 2021 03:15 AM

 

Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM

கரோனா காலத்தில் மக்களுக்கு உணவளிக்கும் - தொண்டு நிறுவனங்களுக்கு கிலோ ரூ.22-க்கு அரிசி விநியோகம் : இந்திய உணவுக் கழக கோட்ட மேலாளர் என்.ராஜேஷ் தகவல்

வடகோவையில் அமைந்துள்ள இந்திய உணவுக் கழக சேமிப்புக் கிடங்கில் இருந்து லாரியில் எடுத்துச் செல்லப்படும் உணவு தானியங்கள்.

கோவை

கரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு உணவளிக்கும் பணியில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களுக்கு கிலோ ரூ.22-க்கு இந்திய உணவுக் கழகம் அரிசி வழங்கி வருகிறது.

வடகோவையில் அமைந்துள்ள இந்திய உணவுக் கழக (எஃப்சிஐ) கோவை கோட்டமானது பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா (பிஎம்ஜிகேஏஒய்-3) திட்டத்தின்கீழ் இலவச அரிசி, கோதுமை வழங்கி வருகிறது. கரோனா தொற்று, ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவளிக்கும் வகையில் இந்த கடினமான சூழ்நிலையிலும் எஃப்சிஐ தானிய சேமிப்புக் கிடங்குகள் அனைத்து நாட்களிலும் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து செல்லும் தானியங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

இதுதொடர்பாக எஃப்சிஐ கோட்ட மேலாளர் என்.ராஜேஷ் கூறியதாவது: கோவையில் உள்ள 3 தானிய சேமிப்புக் கிடங்குகளில் இருந்து மட்டும் 7,735 மெட்ரிக் டன் அரிசி, 641 மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, கோவை கோட்டத்தின் கீழ் வரும் திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களிலும் இதேபோல உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை அந்த மாவட்டங்களுக்கு மொத்தம் 39,128 மெட்ரிக் டன் அரிசி, 4,787 மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்பட்டுள்ளது. இந்திய உணவுக் கழகமானது மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு உணவு தானியங்களை வழங்க தயார் நிலையில் உள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு உணவளிக்கும் தொண்டு நிறுவனங்கள், கிலோ ரூ.22-க்கு அரிசியை பெற்றுக்கொள்ளலாம். வரும் 2022 மார்ச் 31-ம் தேதி வரை இந்த சலுகை நடைமுறையில் இருக்கும். தொண்டு நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒரு டன் வாங்க வேண்டும். அதிகபட்சம் 10 டன் வரை அரிசி வழங்கப்படும். இதுபோன்று, கடந்த ஆண்டு தொண்டு நிறுவனங்களுக்கு கோவையில் இருந்து 30 டன் அரிசி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக சலுகையைப் பயன்படுத்தி அரிசி வாங்க வருவோர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, எஃப்சிஐ மேலாளர் (விற்பனைப் பிரிவு) பி.மணிகண்ட ஆறுமுகத்தை 9677122243 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x