Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று இந்தியாவுக்கு ஆக்சிஜன் கொண்டு வந்த விமானிக்கு இங்கிலாந்து பிரதமர் விருது

ஜஸ்பால் சிங்

லண்டன்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ‘விர்ஜின் அட்லாண்டிக்’ என்ற விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்தவரான ஜஸ்பால் சிங், ‘கல்சா எய்ட்’ என்ற தொண்டு நிறுவனத்திலும் பொறுப்பில் உள்ளார். இந்தியாவில் கரோனா தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இறப்பதைப் பார்த்து இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு உதவ முடிவு செய்தார்.

‘கல்சா எய்ட்’ அறக்கட்டளை மூலம் நன்கொடையாக பெற்ற 200 ஆக்ஸிஜன் செறிவூட்டி களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக, தான் பணியாற்றும் ‘விர்ஜின் அட்லாண்டிக் ’ நிறுவனத்திடம் பேசி நிலைமையை விளக்கினார். விமான நிறுவனம் இலவசமாக விமானத்தை இந்தியாவுக்கு அனுப்ப ஒப்புக் கொண்டது. தானே விமானத்தை ஓட்டிச் செல்வதாகக் கூறிய ஜஸ்பால் சிங், 200 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் சமீபத்தில் லண்டனில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு வந்து அவற்றை ஒப்படைத்தார். இதுபற்றி அறிந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜஸ்பால் சிங்கை பாராட்டி உள்ளார். மனிதாபிமான சேவைக்காக இங்கிலாந்து பிரதமரின் ‘பாயின்ட்ஸ் ஆப் லைட்’ விருதும் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜஸ்பால் சிங்குக்கு போரிஸ் ஜான்சன் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில் உங்களது தாராளமான உதவிக்கு நன்றி. இந்திய மக்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை விமானத்தில் எடுத்துச் சென்றதை கேட்டு எனக்கு உத்வேகம் ஏற்பட்டது. இரு நாட்டுக்கும் உள்ள ஆழமான நட்பை காட்டும் வகையில் இந்திய மக்களுக்கு இங்கிலாந்து மக்கள் உதவ முன்வந்துள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x