Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

கரோனா பாதிப்பு அதிகரிப்பதால் ரயில் ஓட்டுநர்கள், கார்டுகள் பணி முறையில் மாற்றம் செய்ய வேண்டும்: அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் கழகம் வலியுறுத்தல்

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ரயில் ஓட்டுநர்கள், கார்டுகளுக்கான பணி முறையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் கழகம் வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அக் கழகத்தின்தென்மண்டல தலைவர் வி.பாலசந்திரன், பொதுச்செயலாளர் யு.பாபுராஜன் ஆகியோர், ரயில்வேஅமைச்சர் பியூஸ்கோயல் மற்றும்சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

31 ஆயிரம் பேருக்கு தொற்று

நாடுமுழுவதும் கரோனா வேகமாக பரவி வருகிறது. இதுவரை31 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள்கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 3,400 பேர் இறந்துள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ரயில்வே ஊழியர்கள் பாதுகாப்பாக பணியை மேற்கொள்ள போதிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

450 பேர் உயிரிழப்பு

நாடுமுழுவதும் பெரும்பாலான ரயில் ஊழியர்கள் தினமும் பணிக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக 70 ஆயிரம் ரயில் ஓட்டுநர்களும், 40 ஆயிரம் கார்டுகளும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ரயில் ஓட்டுநர்கள், கார்டுகள் என 450 பேர் கரோனா தொற்றால் இறந்துள்ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களை ஓட்டிச் செல்லும் ஒட்டுநர்கள், கார்டுகள் வேறு மாநிலத்துக்கோ அல்லது பிற மாவட்டங்களுக்கோ சென்று மாறி,மாறி ரயில்களை இயக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இதனால்,ரயில் ஓட்டுநர்கள் ரயில் நிலையங்களில் இருக்கும் ஓய்வு அறைகளில் தங்கி, மீண்டும் பணியாற்றும் நிலை உள்ளது.

அந்த அறைகளில் பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த பணியாளர்களும் தங்கியுள்ளனர். இதனால், ஊழியர்கள்மத்தியில் கரோனா அச்சம் ஏற்படுகிறது. மேலும், ஒப்பந்ததாரர்கள் மூலம் உணவு விநியோகம் செய்வதிலும் சிக்கல் இருந்து வருகிறது.

எனவே, பிற இடங்களில் தங்கி மீண்டும் பணிக்குத் திரும்புவதை தவிர்த்திடும் வகையில் பணி மாற்றம் செய்ய வேண்டும். மேலும்,ரயில் இன்ஜினில் பல்வேறு ஓட்டுநர்களும் பணியாற்றும் சூழல்நிலவுவதால், ரயில் இன்ஜின் அறையை அடிக்கடி தூய்மைப்படுத்தி போதிய மருத்துவ உப கரணங்கள் இடம்பெறவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x