Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போரிடுகிறோம் : விவசாயிகளுக்கு 8-வது தவணை நிதி வழங்கி பிரதமர் மோடி கருத்து

கரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போரிடுகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் திட்டம் கடந்த 2019-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 8-வது தவணையாக ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ரூ.2,000 வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன்படி நாடு முழுவதும் 9.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் செலுத்தப்பட்டது.

இதன்பிறகு உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, மேகாலயா, காஷ்மீர், அந்தமான் நிகோபரை சேர்ந்த விவசாயி களுடன், பிரதமர் பேசியதாவது:

பி.எம். கிசான் திட்டத்தில் முதல்முறையாக மேற்கு வங்கத்தை சேர்ந்த 7 லட்சம் விவசாயிகளும் பலன் அடைவது மகிழ்ச்சி அளிக்கிறது. கரோனா காலத்தில் பல்வேறு இடர்பாடுகளை தாண்டி உணவு உற்பத்தியில் நமது விவசாயிகள் சாதனை படைத்து வருகின்றனர். இதேபோல குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தில் மத்திய அரசு ஆண்டுதோறும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இதுவரை 10 சதவீதம் கூடுதலாக உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடி யாக ரூ.58,000 கோடி பணம் செலுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 2 கோடிக்கும் மேற்பட்ட கிசான் கிரெடிட் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் தவணை தொகையை செலுத்த ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஏதாவது ஒரு தொற்று உலகை அச்சுறுத்துவது வழக்கம். அந்த வகையில் இ்பபோது கரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிட்டு வருகிறோம். மத்திய அரசின் ஒவ்வொரு துறையும் வைரஸை ஒழிக்க இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறது. நாட்டு மக்களின் வேதனையை, துயரத்தை குறைக்க அனைத்து துறைகளும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றி வருகின்றன.

கரோனா தடுப்பு பணிகளில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் இப்போதே தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறேன். உங்களுக்கான தேதி, நேரம் ஒதுக்கப்படும் வரை காத்திருந்து மறக்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதன்மூலம் மட்டுமே கரோனாவில் இருந்து தப்பிக்க முடியும்.

கிராமங்களில் கரோனா வைரஸ் பரவுவதை முழுமையாக தடுக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை பஞ்சாயத்து அமைப்புகள் எடுக்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற செய்ய வேண்டும்.

நாடு முழுவதும் ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்ய மத்திய படைகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. சிறப்புரயில்கள் மூலம் நாடு முழுவதும் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தியாவின் மருந்து நிறுவனங்கள், கரோனா தடுப்பூசி, உயிர் காக்கும் மருந்துகளின் உற்பத்தியை அதிகரித்துள்ளன.

இந்த நேரத்தில் மாநில அரசுகளிடம் ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். கள்ள சந்தை யில் மருந்து விற்போர், பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் இந்தியா தனது தன்னம்பிக்கையை கைவிடாது. இப்போதைய கரோனா சவாலையும் இந்தியா உறுதியோடு எதிர்கொண்டு வெற்றி பெறும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் வேளாண் துறை மூத்த அதிகாரிகளும் பிரதமருடனான காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற னர். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x