Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

சென்னையில் 152 இடங்களில் தடுப்பூசி முகாம் : ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு 152 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றை ஒழிக்க தடுப்பூசியே சிறந்த ஆயுதம். சென்னை மாநகராட்சியில் இதுவரை 11 லட்சத்து 42 ஆயிரத்து 447 பேருக்கு முதல் தவணை, 5 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டு கொள்வதன் மூலம் கரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதோடு, நோயினால் ஏற்படும் தாக்கமும் குறைவாக இருக்கும்.

தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பொதுமக்களிடையே ஆரம்ப நாட்களில் காணப்பட்ட ஆர்வம் தற்போது குறைந்துள்ளது. எனவே பொதுமக்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று முதல் 3 நாட்களுக்கு 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 152 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை உடனடியாக ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வீடு வீடாகச் சென்று காய்ச்சல் போன்ற தொற்று அறிகுறி உள்ளதா என களப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரிடமும் தடுப்பூசி போடப்பட்ட தகவல்கள் பெறப்படும்.

அடுக்குமாடி குடியிருப்புகளில்

இந்த தகவல்களின் அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டியவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அதற்கேற்றவாறு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும். மக்கள் அதிகம் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு மாநகராட்சி ஆணையரின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x