Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

‘உலகத் தமிழர்களே, உயிர் காக்க நிதி வழங்குவீர்’ : வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கரோனா வைரஸ் தொற்றை தடுக்க முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட காணொலியில் அவர் பேசியிருப்பதாவது:

கரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதை வென்று நாம் மீண்டு எழுவோம் என்ற நம்பிக்கையை முதலில் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் தற்போது கரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடி, நிதிநெருக்கடி என இரு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இரண்டையும் சமாளிப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு முழுமையாக செய்து வருகிறது.

கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும், தொற்றுக்குள்ளானவர்களை காப்பதற்குமான பணிகளில் கண்ணும் கருத்துமாக தமிழக அரசு தன்னை ஈடுபடுத்தியுள்ளது. கரோனா பரவாமல் தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் மக்களுக்கு நிவாரண நிதியை அரசுவழங்கி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயம்வைத்து பணியாற்றி வருகின்றனர்.

கரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலை மிக மோசமானதாக இருக்கிறது. கரோனாவின் வீரியத்தை உணர்ந்து மருத்துவமனைகள், மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன், தடுப்பூசிகள் ஆகியஉள்கட்டமைப்பை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். படுக்கைகள்,மருந்து மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றின் இருப்பை அதிகரிக்க முழுமுயற்சி எடுக்கப்பட்டுள்ளது.மேலும், கூடுதல் மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.

இந்த திடீர் அவசர செலவினங்களுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். கருணை உள்ளத்துடன் பலரும் நிதியை வழங்கி வருகின்றனர். புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தாய்த் தமிழகத்தை மறக்கவில்லை. மறக்க முடியாது என்பதன்அடையாளம்தான் இந்த நிதி திரட்டும் நிகழ்வாகும். மிகவும் சிக்கலான,நெருக்கடியான இந்த நேரத்தில் தமிழகத்துக்கு மாபெரும் உதவிகளை செய்ய முன்வந்த உங்கள்அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவ நெருக்கடியும் - நிதி நெருக்கடியும் இணைந்து சூழும் இந்த நேரத்தில் மக்களை காக்கும் மகத்தான பணியில் தங்களைத் தாங்களே முன்வந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழ் மக்களைக் காக்கும் முயற்சிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்க வேண்டும். ஈகையும் இரக்கமும் கருணையும் பரந்த உள்ளமும் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கைகொடுக்கும் வகையில் நிதி வழங்க வேண்டும்.

இவை கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ஆக்சிஜன் படுக்கைகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசி போன்றகரோனா தடுப்புக்குத் தேவையான பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த விவரங்கள் பொது வெளியில் வெளியிடப்படும். நீங்கள் அளிக்கும் தொகைக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும். உங்கள் நிதி கரோனாவை முற்றிலும் ஒழிக்க உதவியாக இருக்கும். மக்களின் உயிர்காக்க உதவிக்கரம் நீட்டுங்கள்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x