Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM

கரோனா அச்சம் இருப்பதால் மருத்துவமனைகளில் உள்ள - தடுப்பூசி மையங்களை வேறு இடங்களில் அமைக்க வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

சென்னை

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசி, ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக `இந்து தமிழ் திசை' நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியிடப்பட்டது.

இந்த செய்தியின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கின் விசாரணை தலைமை நீதிபதிசஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது.

சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் சார்பில் அரசுதலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, கூடுதல் அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. மே 6-ம் தேதி 24,898-ஆக இருந்த தொற்றாளர்கள் எண்ணிக்கை, மே 11-ல் 29,272-ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 43,858 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள நிலையில், மேலும் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இதுதவிர, கூடுதலாக 10 ஆயிரம் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு தினமும் 20 ஆயிரம் குப்பி ரெம்டெசிவிர் மருந்துதேவைப்படும் நிலையில், மத்திய அரசு 7 ஆயிரம் குப்பிகளை மட்டுமேஒதுக்கீடு செய்கிறது. தடுப்பூசிக்கு சர்வதேச அளவில் டெண்டர் கோருவது தொடர்பாக விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்ஆர்.சங்கரநாராயணன், "தமிழகத்துக்கு 419 டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று 519 டன் வழங்கப்படுகிறது. ராணுவ தளவாட ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மூலம் தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க, பி.எம்.கேர் நிதியம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்" என்றார்.

இதையடுத்து, உடனடியாக தமிழக அரசுடிஆர்டிஓ மூலம் ஆக்சிஜன் மையங்களை அமைக்க பி.எம்.கேர் நிதியத்துக்கு விண்ணப்பிக்குமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும், கரோனா தடுப்பூசிமையங்களை மருத்துவமனைகளில் அமைத்துள்ளதால், தடுப்பூசிபோட வருபவர்களால் அங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. இதைதவிர்க்க, கரோனா தடுப்பூசி மையங்களை அங்கிருந்து அகற்றி, வேறு இடங்களில் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆலோசனை தெரிவித்தனர்.

மேலும், கரோனாவை எதிர்த்து மருத்துவமனைகளில் தன்னலமற்றும், தியாக மனப்பான்மையுடனும் சேவையாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களை மனதாரப் பாராட்டுவதாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.

தமிழகத்தைப்போல, புதுச்சேரியிலும் கரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

புதுச்சேரியைப் பொறுத்தவரையில், கரோனா நிலவரம் குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் தகவல்களும், ஊடகங்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பில் கூறப்படும் விவரங்களும் வேறுவிதமாக உள்ளன என்றுதெரிவித்த நீதிபதிகள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எடுக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை (மே 13) தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை, இன்றைக்கு தள்ளிவைத்துள்ளனர்.

கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று ஆண்கள் 17,442, பெண்கள் 12,913 என மொத்தம் 30,355 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். வெளி மாநிலங்களில் இருந்து வந்த 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 7,564, செங்கல்பட்டில் 2,670, கோவையில் 2,636, திருவள்ளூரில் 1,344, மதுரையில் 1,172, கன்னியாகுமரியில் 1,076 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து 68,864-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 3 லட்சத்து 66,434 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 12 லட்சத்து 79,658 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 4,782 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 19,508 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர்.

சென்னையில் 40,613 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 72,735 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 293 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 89 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,471-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 5,458 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் 267 ஆய்வகங்களில் 2.45 கோடி பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1.56 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x