Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

கரோனா பாதித்த தம்பதியரின் குழந்தைகளை பாதுகாக்க பிரத்யேக குழு : மத்திய அரசு உத்தரவு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தம்பதியரின் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில், மாவட்ட வாரியான பிரத்யேக குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் சில சமயங்களில், கணவனும் மனைவியும் தொற்று பாதிப்பால் உயிரிழந்து விட, அவர்களின் குழந்தைகள் ஆதரவற்றவர்களாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தக் குழந்தைகள் கடத்தப்படுவதற்கும், குழந்தை தொழிலாளர்களாக மாற்றப்படுவதற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு அண்மையில் உத்தரவிட்டது.

இதன்பேரில் நாடு முழுவதும் மாவட்ட வாரியாக பிரத்யேக குழுக்களை மத்திய பெண்கள் மற்றும் குழுந்தைகள் நலத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இந்தக் குழுக்களுக்கு அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் தலைமை வகிப்பர். 10 பேர் கொண்ட இக்குழுவில் உள்ளாட்சி அமைப்பின் தலைவர், காவல் ஆணையர் அல்லது காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சட்ட சேவை அமைப்பின் செயலர், மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் தம்பதியரின் குழந்தைகள் குறித்த விவரங்களை, இந்தக் குழுவுக்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவிக்க வேண்டும். அதன்படி, அந்தக் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை இந்தக் குழு தொடர்ந்து கண்காணிக்கும். ஒருவேளை, அவர்களின் பெற்றோர் உயிரிழக்க நேரிட்டால், அந்தக் குழந்தைகளை காப்பகங்களில் சேர்ப்பது அல்லது முறைப்படி தத்துக் கொடுப்பது உள்ளிட்ட பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும் என மத்திய அரசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x