Last Updated : 12 May, 2021 03:14 AM

 

Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

ஆபத்தான நிலையில் இருப்போரை காப்பாற்ற‌ கர்நாடகாவில் ஆக்ஸிஜன் பேருந்து அறிமுகம் :

கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளை காப்பாற்ற ஆக்ஸிஜன் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஆக்ஸிஜன் பேருந்து சேவையை அறிமுகப்படுத்தினார். பின்னர் எடியூரப்பா கூறுகையில், ''கரோனா தொற்றின் பாதிப்பால் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் கர்நாடக மாநிலத்துக்கு ஆறாத காயத்தை ஏற்படுத்தியது. எனவே இனி அத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் ஆக்ஸிஜன் பேருந்து சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது மருத்துவமனைக்கு வெளியே ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் கரோனா நோயாளிகளை காப்பாற்றும் வகையில் இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல்ககட்டமாக 20 மாநகராட்சி பேருந்துகள் ஆக்ஸிஜன் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்திலும் 8 ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் தவிக்கும் நோயாளிகளையும், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தவிப்போரையும் இந்த பேருந்து விரைந்து சென்று காப்பாற்றும். முதல்கட்டமாக பெங்களூருவில் அரசு மருத்துவமனைகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்'' என்றார்.

பொறுப்பு வேண்டாமா?

இதனிடையே எடியூரப்பா நேற்று பெங்களூரு மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது சில தனியார் மருத்துவமனைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் 30 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெறுவது தெரியவந்தது. அதற்கு எடியூரப்பா சுகாதாரத்துறை அதிகாரிகளிடம், ''கரோனா நோயாளிகள் ஐசியூ படுக்கை கிடைக்காமல் சாலைகளில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பணம் படைத்த இவர்கள் 30 நாட்களாக அந்த படுக்கையில் படுத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறாமல் இருப்பது ஏன்? இந்த மேட்டுக்குடியினருக்கு மற்றவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு வேண்டாமா? விரைவில் அவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x