Last Updated : 12 May, 2021 03:14 AM

 

Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

விளையாட்டாய் சில கதைகள்: ரசிகர்களை கவர்ந்த யூனிவர்சல் பாஸ்

தாங்கள் விளையாடும் நாட்டையும் தாண்டி, உலகம் முழுக்க ரசிகர்களைப் பெறும் ஆற்றல் ஒரு சில விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே உள்ளது. அந்த ஆற்றலைப் பெற்ற வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் கிறிஸ் கெயில். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அவர் கிரிக்கெட் போட்டியில் ஆடிவந்தாலும், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அவரை நேசிக்கின்றனர். இந்த அளவுக்கு ரசிகர் கூட்டத்தைப் பெற்ற கிறிஸ் கெயிலைப் பற்றி சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:

1979-ம் ஆண்டு, ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் கிறிஸ் கெயில் பிறந்தார். கிறிஸ் கெயிலின் அப்பா, போலீஸ்காரராக இருந்தார். அவரது தாத்தா உள்ளூர் கிளப்களுக்காக பல கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார். 19 வயது முதல் ஜமைக்கா அணிக்காக ஆடிவந்த கிறிஸ் கெயில், 20 வயது முதல் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஆடி வருகிறார்.

வலுவான பேட்ஸ்மேனாக கருதப்படும் கிறிஸ் கெயிலுக்கு, ஆரம்ப கட்டத்தில் இதயத்தில் பிரச்சினை இருந்துள்ளது. கொஞ்சம் வேகமாக ஓடினாலோ அல்லது உணர்ச்சி வசப்பட்டாலோ, அவரது இதயம் வேகமாகத் துடிக்கும். இந்த பிரச்சினையை அறுவைச் சிகிச்சை மூலம் சரிசெய்துகொண்டு, இப்போது கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார் கிறிஸ் கெயில்.

‘யூனிவர்சல் பாஸ்’ என்று சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கிறிஸ் கெயில், பேட்ஸ்மேனாக மட்டுமின்றி ஒரு சுழற்பந்து வீச்சாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் 73 விக்கெட்களையும், ஒருநாள் போட்டிகளில் 167 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் ஆடினாலும், கெயிலுக்கு அதிக அளவில் ரசிகர்களைப் பெற்றுத் தந்தது டி20 போட்டிகள்தான்.

இப்போட்டியில் இதுவரை கிட்டத்தட்ட 14 ஆயிரம் ரன்களை கிறிஸ் கெயில் பெற்றுள்ளார். டி20 கிரிக்கெட் போட்டிகளில் கிறிஸ் கெயில் அடித்த 175 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x