Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

நான் எழுதிய புத்தகங்களை - கல்வித் துறைக்கு வாங்க வேண்டாம் : தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவு

சென்னை

தான் எழுதிய புத்தகங்களை பள்ளிக்கல்வித் துறைக்கு எக்காரணம் கொண்டும் வாங்க வேண்டாம் என்று தலைமைச் செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நான் பணி நேரம் முடிந்த பிறகும், விடுமுறை நாட்களிலும் எனக்கு தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களை தொகுத்தும் சில நூல்களை எழுதி வந்தேன்.

இந்த நிலையில், இப்போது உள்ளபொறுப்பின் காரணமாக பள்ளிக்கல்வித் துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். ‘நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும், எந்த அழுத்தம் வரப்பெற்றாலும் தலைமைச் செயலராக பணியாற்றும் வரை எந்த திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது’ என்பதே அந்த உத்தரவு. பார்ப்பவர்களுக்கு, என் பணியின் காரணமாக அதுதிணிக்கப்பட்டிருப்பதாக தோன்றி, களங்கம் விளைவிக்கும் என்பதால்தான் இக்கடிதத்தை எழுதியுள்ளேன். எந்த வகையிலும் என் பெயரோ, பதவியோ தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம்.

மேலும், அரசு விழாக்களில் என்னை மகிழ்விப்பதாக எண்ணி, பூங்கொத்துகளுக்கு பதிலாக என் நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக விநியோகிக்க வேண்டாம்.

இந்த வேண்டுகோள் மீறப்பட்டால், அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் இருந்து வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இந்த சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x