Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி - உண்மைகளை காங். எதிர்கொள்ள வேண்டும் : செயற்குழு கூட்டத்தில் கட்சியினருக்கு சோனியா காந்தி அறிவுரை

உண்மைகளை காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கட்சியை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினருக்கு சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சி இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.தேர்தல் முடிவுகள் வேதனை தருகிறது என்று கூறுவது மிகவும் சிறிய வார்த்தை. இந்த தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய சிறிய குழு அமைக்கப்படும். கேரளாவிலும், அசாமிலும் எவ்வாறு தோல்வி அடைந்தோம் என்பதையும், மேற்கு வங்கத்தில் மொத்தமாக தோல்வி அடைந்தோம் என்பதையும் நேர்மையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு சங்கடமான பாடங்களை புகட்டியுள்ளது. ஆனால், யதார்த்தத்தை, உண்மைகளை நேருக்கு நேர் சந்திக்காமல் இருந்தால், நாம் சரியான படிப்பினைகளை பெற முடியாது.நாம் கட்சியை முன்னேற்ற வேண்டும். கட்சியை ஒழுங்குபடுத்த வேண்டும். இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதை இந்த முடிவுகள் தெளிவாக உணர்த்துகிறது.

மருத்துவ வல்லுநர்கள் கரோனா 2-வது அலை வரும் என எச்சரிக்கை விடுத்தும் மோடி அரசு அதைப் புறக்கணித்து, மிகப்பெரிய பேரழிவுக்கு வழிவகுத்துள்ளது. மோடி அரசின் கவனக்குறைவால் இந்த தேசம் மோசமான விலை கொடுத்து வருகிறது. கரோனா 3-வது அலை வரும் என்றும்ெ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் பொது சுகாதாரம் சீர்குலைந்து விட்டது. இவ்வாறு சோனியா பேசினார்.

தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு:

காங்கிரசுக்கு முழு நேர தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏற்கெனவே வலியுறுத்தி வரும் நிலையில், அதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. எனினும், கரோனா தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் இப்போது தேர்தல் நடத்த வேண்டாம் என்று சில தலைவர்கள் வலியுறுத்தினர். இதனால், காங்கிரஸ் தலைவர் தேர்தலை தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x