Published : 10 May 2021 06:23 AM
Last Updated : 10 May 2021 06:23 AM

கர்நாடகா, பஞ்சாப், பிஹார், உத்தராகண்ட் ஆகிய - மேலும் 4 மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பிரதமர் ஆலோசனை :

கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மேலும் 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி மூலம் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

நாட்டில் கரோனா 2-வது அலை தீவரமடைந்து வருகிறது. தினமும் சுமார் 4 லட்சம் பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்படுகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள், மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதையடுத்து, இந்தவிவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. ஆக்சிஜன் உற்பத்திமற்றும் விநியோகம் குறித்து ஆய்வு நடத்த 12 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

மருத்துவமனைகளில் கரோனாநோயாளிகளை அனுமதிக்க தொற்று உறுதி செய்யப்பட்டதற்கான் அறிக்கை இனி கட்டாயம் இல்லை என மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒரு நோயாளிக்குக் கூட சிகிச்சை மறுக்கப்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை பல்வேறு மாநில அரசுகள் அமல்படுத்தின. ஆனாலும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இப்போது, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.

இதற்கிடையே, கரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்படி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், இமாச்சலபிரதேசம் ஆகிய 4 மாநில முதல்வர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அந்த வகையில், கர்நாடகா, பஞ்சாப்,பிஹார், உத்தராகண்ட் ஆகியமேலும் 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தனித்தனியாக தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தினார். அப்போது கரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதல்வர்கள் விளக்கினர். இந்த ஆலோசனையின்போது, பிரதமர் மோடி சில ஆலோசனைகளை வழங்கியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x