Published : 10 May 2021 06:23 AM
Last Updated : 10 May 2021 06:23 AM

பாஜக பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் :

சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவராக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, நாகர்கோவில், திருநெல்வேலி, கோவை தெற்கு, மொடக்குறிச்சி ஆகிய 4 இடங்களில் வென்றது. இதன்மூலம் 2001-க்கு பிறகு தமிழக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் இடம்பெறுகின்றனர்.

இந்நிலையில், பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகஎம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மேலிடப் பார்வையாளரான மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி), வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), எம்.ஆர்.காந்தி (நாகர்கோவில்), சி.கே.சரஸ்வதி (மொடக்குறிச்சி) ஆகிய 4 எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது என்றனர். இப்போது 4 தாமரைகள் மலர்ந்துவிட்டன. தமிழக சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயல்படும். பாஜகவின் 4 எம்எல்ஏக்களும் 4 தூண்களாக இருப்பார்கள். அரசுக்கு ஆலோசனை வழங்குவதோடு, அரசின் தவறுகளை பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் சுட்டிக்காட்டுவார்கள்’’ என்றார்.

இதற்கிடையில், சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரன் 2001, 2011 சட்டப்பேரவை தேர்தல்களில் திருநெல்வேலி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2017-ல் பாஜகவில் இணைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x