Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

கட்டணம் இல்லை, பயண அட்டையும் தேவை இல்லை - பேருந்துகளில் பெண்கள் உற்சாகத்துடன் இலவச பயணம் : திட்டம் அமலுக்கு வந்தது; 5,600 பேருந்துகளில் பயணிக்கலாம் என அதிகாரிகள் தகவல்

சென்னை

நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் நேற்று அமலுக்கு வந்தது. கட்டணம் இல்லை, பேருந்து பயண அட்டையும் தேவை இல்லை என்பதால் பெண்கள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர். தமிழகம் முழுவதும் 5,600 பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக முதல்வராக கடந்த 7-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் முதல் நாளிலேயே 5 முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கும் வகையில் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றாக, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட அனைத்து பெண்களும் நகரப்பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணநகரப் பேருந்துகளில், பணிபுரியும்மகளிர் உள்ளிட்ட அனைத்து பெண்களும் நேற்று இலவசமாக பயணம் செய்தனர். கட்டணம் இல்லை,பயண அட்டையும் தேவை இல்லைஎன்பதால், பெண்கள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.

இத்திட்டம் மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ரூ.1,200 கோடி அரசு மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து கழக அதிகாரிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவர்களிடம் கேட்டபோது, ‘‘அனைத்து பெண்களும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு 8-ம் தேதி (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளது. நகரப் பேருந்துகளில் ‘சாதாரண கட்டணப் பேருந்து’, ‘பெண்களுக்கு கட்டணம் இல்லை’என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மொத்தம்5,600 சாதாரண அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். மொத்தம் உள்ளநகரப் பேருந்துகளில் 60% பேருந்துகள் இதில் அடங்கும். விரைவு, சொகுசு, ஏசி பேருந்துகளுக்கு இச்சலுகை பொருந்தாது’’ என்றனர்.

திருநங்கைகளுக்கும் அனுமதி:முதல்வர் ஸ்டாலின் உறுதி

தமிழகத்தில் சில பகுதிகளில் நகரப் பேருந்துகளில் நேற்று பயணம் செய்த திருநங்கைகளிடமும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதற்கு அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்நிலையில், பெண் செய்தியாளர் ஒருவர், “இலவச பேருந்து பயணத் திட்டத்தை பெண்கள் மட்டுமின்றி, திருநங்கைகளுக்கும் அறிவித்தால் நன்றாக இருக்கும்” என்று தனது ட்விட்டர் பதிவு மூலம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ‘‘மகளிர் நலன், உரிமையுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது முன்னாள் முதல்வர் கருணாநிதி காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதை கவனப்படுத்தியதற்கு நன்றி. பெண்கள்போலவே திருநங்கைகளும் கட்டணமின்றி பயணிப்பது குறித்து பரிசீலித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x