Published : 08 May 2021 03:14 AM
Last Updated : 08 May 2021 03:14 AM

தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின் - முதல் நாளில் 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்து : தனியார் மருத்துவமனை கரோனா கட்டணத்தை காப்பீடு மூலம் அரசே ஏற்கும்ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்புநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்கரோனா நிவாரணம் முதல் தவணையாக ரூ.2000

ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருடன் 33 பேர் அடங்கிய அமைச்சரவையும் நேற்று பதவி யேற்றது. அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து, தலைமைச் செய லகத்தில் முதல்வராக முறைப்படி பொறுப் பேற்ற பின் கரோனா நிவாரணம் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் உள்ளிட்ட 5 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெ ழுத்திட்டார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில், முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அப்போது பதவியேற்ற ஸ்டாலின், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.." என தொடங்கி பதவியேற்றார். அப்போது அரங்கத்தில் இருந்த அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

பின்னர் ஸ்டாலினைத் தொடர்ந்து துரை முருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட 33 பேர் அமைச்சர்களாக பதவி யேற்றனர். அதன்பின், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து தேநீர் விருந்திலும் பங்கேற்ற னர். பின்னர் 10.30 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

பதவியேற்பு விழாவில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பேரவை முன்னாள் தலைவர் பி.தனபால், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந் திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், பாமக தலைவர் ஜி.கே.மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ் வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்,சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆகி யோர் பங்கேற்றனர்.

இதுதவிர, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி கள், பல்வேறு துறைகளின் உயர் அதி காரிகள் என 600-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மேலும், முதல்வர் மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரும் பங்கேற்றனர்.

பொறுப்பேற்பு

பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின், அங்கிருந்து கருணாநிதி நினைவிடத் துக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சென்று மரியாதை செலுத் தினர். அதன்பின் பெரியார் திடல், முன் னாள் பொதுச்செயலாளர் அன்பழகன் இல்லம், கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லம் ஆகிய இடங்களுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், பகல் 12.20 மணிக்கு தலைமைச் செயலகம் வந்தார். அவரை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, தனது அறைக்குச் சென்ற ஸ்டாலின், முதல்வராக முறைப்படி பொறுப்பேற்றார். அதன்பின், 5 திட்டங்களை தொடங்குவதற்கான முக்கிய கோப்புகளில் கையெழுத் திட்டார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அறிவிக்கப்பட்ட இத்திட்டங்களின் விவரம் வருமாறு:

l கரோனா அச்சுறுத்தலால் மக்கள் படும் துன்பங்களை போக்கவும் வாழ்வா தாரத்துக்கு உதவும் வகையிலும் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங் களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றும் வகையில், 2 கோடியே 7 லட்சத்து 87 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,153 கோடியே 39 லட்சம் செலவில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை வரும் மே மாதம் வழங்கும் திட்டம்.

l தேர்தல் அறிக்கையில் அளித்த வாக் குறுதியை நிறைவேற்றும் வகையில், மக்கள் நலன் கருதி ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 வீதம் குறைத்து மே 16-ம் தேதி முதல் விற்பனை செய்யும் திட்டம்.

l தமிழகம் முழுவதும் அரசு போக்கு வரத்துக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும் பேருந்து பயண அட்டை இல்லாமலும் நாளை (இன்று) முதல் பயணிக்கலாம். இதனால் போக்கு வரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத்தொகை ரூ.1,200 கோடி மானியமாக அரசு வழங்கும் திட்டம்.

l மாவட்டம்தோறும் மக்களின் பல் வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணும் வகையில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தை செயல்படுத்த புதிய துறையை உருவாக்கி, அதற்கு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கும் திட்டம்.

l கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும். இதன்படி அனைத்து வகையான கரோனா சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு திருப்பி வழங்கும் திட்டம்.

இந்த திட்டங்களுக்கான கோப்புகளில் முதல்வர் கையொப்பமிட்டு, உடனடியாக பணிகளை தொடங்க உத்தரவிட்டார்.

மேற்கண்ட இந்த திட்டங்களில் ஆவின் பால் விலை குறைப்பு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை செலவுகளை ஏற்பது ஆகியவற்றைத் தவிர மற்ற 3 திட்டங்களுக்கும் நேற்றே அரசாணை வெளியிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x