Published : 08 May 2021 03:14 AM
Last Updated : 08 May 2021 03:14 AM

புகழுரை, பொய்யுரைகள் வேண்டாம்.. உள்ளதை உள்ளபடி அதிகாரிகள் கூறவேண்டும் - போர்க்கால அடிப்படையில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்றுஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். புகழுரை, பொய்யுரையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. அலுவலர்கள் ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பு அதிகாரிகளுடன் நேற்று மாலை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கரோனா 2-வது அலை நாடு முழுவதும் பெருகி, தமிழகத்திலும் இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. புதிதாக பொறுப்பேற்ற உடனேயே இந்த பெரும் சவாலை சமாளித்து, மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் பெரும் கடமை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 25 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. இது அடுத்த2 வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. அதற்கேற்ப படுக்கை வசதி, ஆக்சிஜன், மருந்துதேவையும் அதிகரிக்கும். எனவே,நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், மருத்துவ கட்டமைப்பு நடவடிக்கைளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.

நோய்க் கட்டுப்பாட்டு பணிகளில் மருத்துவம், வருவாய், காவல், உள்ளாட்சித் துறைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள், காவல்கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் தலைமையில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

மருத்துவர்கள், செவிலியர்கள்,பணியாளர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். கூடுதலாக மருத்துவர்கள், பணியாளர்கள் செவிலியர்களை இப்பணியில் ஈடுபடுத்ததேவையான முயற்சிகளை எடுக்கவும், மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள், ஆக்சிஜன் போதிய அளவில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே, அலுவலர்கள் உள்ளதை உள்ளபடியே ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்க வேண்டும். புகழுரை, பொய்யுரையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. உள்ள உண்மையை நாம் நேருக்கு நேர்சந்திப்போம். மக்களை காப்பாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி ஜே.கே.திரிபாதி, பல்வேறு துறைகளின் செயலர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவினர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்தகட்ட கரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

26,465 பேருக்கு தொற்று

தமிழகத்தில் நேற்று ஆண்கள்15,525, பெண்கள் 10,940 என மொத்தம் 26,465 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 197 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத் துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

விஜயபாஸ்கருக்கு தொற்று

தமிழக சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சரும், விராலிமலைஎம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கருக்கு தொற்று உறுதியானதால், தனிமைப்படுத்திக் கொண்டார்.

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் தினசரி 440 டன் பயன்படுத்தப்படுகிறது. அடுத்த 2 வாரங்களில் 840 டன் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான ஆக்சிஜன் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு 220 டன் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. மத்திய அரசின் தொழில் மற்றும் உள்வர்த்தக மேம்பாட்டுத்துறை (டிபிஐஐடி) அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இதுகுறித்து கடந்த மே 1, 2-ம் தேதிகளில் பேசியபோது, குறைந்தபட்சம் 476 டன் ஆக்சிஜன் உடனே வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். ஆனால், அதற்கான உத்தரவு இதுவரை வெளியிடப்படவில்லை.

தமிழகத்தில் ஆக்சிஜன் அளவு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, உடனே புதிய உத்தரவுகளை வெளியிட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 20 ஐஎஸ்ஓ கிரையோஜெனிக் கன்டெய்னர்கள், ஆக்சிஜனை கொண்டுவர ரயில்களையும் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். கரோனாவில் இருந்து நாட்டை பாதுகாக்கும் உங்களது பெரும் முயற்சிக்கு எனது முழு ஒத்துழைப்பையும் உறுதியாக அளிப்பேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x