Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்காக - டெல்லிக்கு 730 டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டது : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

புதுடெல்லி

டெல்லி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்காக 730 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இவ்வாறு ஆக்சிஜன் கிடைக்கப் பெறாமல் டெல்லியில் 40-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அண்மையில் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனைகள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றமும், டெல்லியில் மே 3-ம் தேதிக்குள் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் என சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கானது, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, "டெல்லிக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. நீதிமன்ற உத்தரவை பின்பற்ற தவறியதற்காக ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், டெல்லி உயர் நீதிமன்றம் முன்னெடுத்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தடை விதித்தனர். மேலும், டெல்லிக்கு இதுவரை எவ்வளவு ஆக்சிஜன் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மே 6-ம் தேதி காலை (நேற்று) மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

போதிய ஆக்சிஜன் இருப்பு

அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் நேற்று காலை 10 மணிக்கு மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் கூறுகையில், “டெல்லியில் உள்ள 56 மருத்துவமனைகளில் மே 4-ம் தேதி நடத்தப்பட்ட ஆய்வில் அங்கு போதிய அளவு மருத்துவ ஆக்சிஜன் இருப்பது தெரியவந்தது. மேலும், உச்ச நீதிமன்றம் கூறிய 700 மெட்ரிக் டன் அளவை விட கூடுதலாக 730 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் டெல்லிக்கு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x