Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

: மணமகனுக்கு தாலி கட்டிய மணமகள்: மகாராஷ்டிராவில் விநோதம் :

பொதுவாக திருமணத்தின்போது மணமகன், மணமகளுக்கு தாலி கட்டுவது வழக்கமான நிகழ்வாகும். மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நடைபெற்ற திருமணத்தில் மணமகனுக்கு, மணமகள் தாலிகட்டியுள்ளார். புதுமை திருமணம் செய்து கொண்ட மணமகன் ஷார்துல் கதமும், மணமகள் தனுஜாவும் தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.

இதுகுறித்து மணமகன் ஷார்துல் கதம் கூறியதாவது: கடநத் 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் தனுஜாவை சந்தித்தேன். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினோம். இருவரின் பெற்றோரும் எங்கள் காதலை ஏற்றுக் கொண்டனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் கரோனா காலகட்டத்தில் திருமண ஏற்பாடுகளை செய்தோம்.

எங்களது சமுதாய வழக்கத்தின்படி ஒட்டுமொத்த திருமண செலவையும் பெண் வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை நான் விரும்பவில்லை.

திருமண செலவில் சரி பாதியை நான் ஏற்றுக் கொண்டேன். இதேபோல திருமணத்திலும் புதுமை படைக்க விரும்பினோம். கடந்த 4 மாதங்களுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்தோம். அப்போது முதலில் நான் தனுஜாவின் கழுத்தில் தாலி கட்டினேன்.

அதைத் தொடர்ந்து தனுஜா எனக்கு தாலி கட்டினார். அப்போது முதல் எங்களது திருமணம் தொடர்பான செய்திகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. சிலர் நேர்மறையாகவும் சிலர் எதிர் மறையாகவும் விமர்சித்து வரு கின்றனர்.

மணமகள் எனக்கு தாலி கட்டியதால் நான் புடவை அணிந்து கொள்ளலாம் என்றுகூட சிலர் விமர்சித்துள்ளனர். எதை பற்றியும் எனக்கு கவலையில்லை.

ஆணுக்கு பெண் சரிசமம் என்பது எனது கொள்கை.அந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறேன். இரு வீடுகளின் பெற்றோரும் எங்களது கருத்தை மதிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x