Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

மக்கள் நீதி மய்யம் கட்சியின் - முக்கிய நிர்வாகிகள் திடீர் ராஜினாமா : கமல்ஹாசன் மீது மகேந்திரன் குற்றச்சாட்டு

கமல்

சென்னை

சட்டப்பேரவை தேர்தல் தோல்வி எதிரொலியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். கட்சியில் இருந்தே விலகிய துணைத் தலைவர் மகேந்திரன், கமல்ஹாசன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கினார். கட்சி தொடங்கிய ஓராண்டில் மக்களவைத் தேர்தல் வந்தது. இதில் தனித்துப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், 3.72 சதவீத வாக்குகளை பெற்றது. சில தொகுதிகளில் அக்கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து கடந்த 2 ஆண்டுகளாக கமல்ஹாசன் பணியாற்றி வந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

ஆனால், இந்தக் கூட்டணி ஒரு தொகுதி யில்கூட வெற்றி பெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் மட்டுமே பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசனுக்கு நெருக்கடி கொடுத்தார். மற்ற வேட்பாளர்கள் அனைவரும் சொற்ப வாக்குகளே பெற்றிருந்தனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியை சீரமைக்கும் பணியினை மிக விரைவில் செய்ய இருக்கிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடந்தது. கமல்ஹாசன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கான காரணம், கட் சியை சீரமைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். அதன்படி, கமல்ஹாசனிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான ஆர்.மகேந்திரன், எம்.முருகானந்தம், மவுரியா, தங்கவேல், உமா தேவி, சி.கே.குமாரவேல், சேகர், சுரேஷ் அய்யர் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். கட்சியின் முக் கிய நிர்வாகிகள் கொடுத்த கடிதங்களை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விரை வில் பரிசீலனை செய்வார்’ என்று கூறப்பட்டுள்ளது.

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்த பரபரப்பு அடங்குவதற்குள், கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள் ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

இது தொடர்பாக, மகேந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், ‘மக்கள் நீதி மய்யத்துக்காக தேர்தலில் பணியாற்றிய சங்க்யா சொல்யூசன்ஸ், கட்சியில் நிர்வாக ரீதியாக தலையிட்டதுதான் தோல்விக்கு காரணம். சங்க்யா சொல்யூசன்ஸ் தலைவர் சுரேஷ் அய்யர், கமல்ஹாசனின் முக்கிய ஆலோசகரான முன்னாள் டிவி மீடியாவைச் சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் இணைந்து கட்சியினரிடையே பிரித்தாளும் சூழ்ச்சியையும் அடக்குமுறை அணுகுமுறையையும் கையாண்டனர். தலைவரை நிர்வாகிகள், தொண்டர்கள் அணுகவிடாமல் இந்த அதிகார மையம் தடுத்தது. இதுபற்றி கமல்ஹாசனிடம் பல முறை எடுத்துக் கூறியும் பலனில்லை. சென்னையில் வேளச்சேரி போன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என்று கருத்தை முன்வைத் தேன். ஆனால், கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று சங்க்யா சொல்யூசன்ஸ் தலைவர் சுரேஷ் அய்யர், ஆலோசகர் மகேந்திரன் ஆகியோரால் முடிவெடுத்து நிர்வாகக் குழுவில் தெரிவிக்கப்பட்டது. பெரிய தோல்விக்கு பிறகும் கமல்ஹாசன் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டு செயல்படுவதாக எனக்கு தெரியவில்லை. மாறிவிடுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. கமல்ஹாசன் கொள்கைக்காகவும், எளிய தொண்டர்களுக்கு தோழராகவும், அனைத்து நல்ல தலைமை பண்புகளையும் கொண்ட நம்மவராக மறுபடியும் செயல்படவேண்டும் என்று வெளியே இருந்து வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.

அதன்பின், செய்தியாளர்களிடம் மகேந் திரன் கூறியதாவது:

கடந்த ஒன்றரை வருடங்களாக கமல்ஹாசனின் கட்சி நடவடிக்கையில் ஜனநாயகம் இல்லாததுபோல் தோன் றியது. அவருடைய நிலைப்பாடு மாறப்போவது இல்லை என்றே தோன்றுகிறது. ஆகவே, கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன். தமிழகத்தை சீரமைக்கிறாரோ இல்லையோ, கட்சியை முதலில் சீரமைக்க வேண்டும். அவர் இந்த தேர்தலில் ஏமாந்ததுபோல, வரக்கூடிய தேர்தலில் ஏமாந்துவிடக் கூடாது. அவ ருடன் நண்பராக இருந்து உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, கமல்ஹாசன் வெளி யிட்ட அறிக்கையில், ‘களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன். தன்னை எப்படி யும் நீக்கி விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகி கொண்டார். ஒரு களையே தன்னை களையென்று புரிந்துகொண்டு நீங்கிக் கொண்ட தில் மகிழ்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x