Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

நல்லகண்ணு, சங்கரய்யாவிடம் வாழ்த்து பெற்றார் ஸ்டாலின் :

முதல்வராக இன்று பொறுப்பேற்கஉள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதுபெரும் இடதுசாரி தலைவர்களான ஆர்.நல்லகண்ணு, என்.சங்கரய்யா, முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 125 இடங்களில் வென்ற திமுக, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிஅமைக்கிறது. திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9 மணிக்கு நடக்கும் எளிய விழாவில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க இருக்கிறார்.

இந்நிலையில், நேற்று காலை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சென்னை நந்தனத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதுபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா, முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆர் கழகத் தலைவருமான ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரையும் அவர்களது இல்லத்தில் சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர் க.பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் ஸ்டாலினுடன் சென்றிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x