Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

ஸ்டாலின் அமைச்சரவையில் 2 பெண்கள், 15 புதுமுகங்களுக்கு வாய்ப்பு : துரைமுருகனுக்கு நீர்ப்பாசனம்; மு.பெ.சாமிநாதனுக்கு செய்தி, விளம்பரத் துறை; மா.சுப்பிரமணியனுக்கு சுகாதாரத் துறை ஒதுக்கீடு

முதல்வராக இன்று பதவியேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், ஏற்கெனவே அமைச்சராக இருந்த 18 பேர், புதுமுகங்கள் 15 பேர் என்று 33 பேர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு பொறுப்பேற்கிறார். புதிதாக பதவிஏற்கும் அமைச்சர்கள், அவர்களுக்கான துறைகளை ஆளுநர் மாளிகை அலுவலகம் நேற்று மாலை 4.14 மணிக்கு வெளியிட்டது.

அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்துறை, காவல், சிறப்பு முயற்சி, சிறப்பு திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆகிய துறைகளை கவனிப்பார்.

புதுமுகமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு நிதித் துறை அளிக்கப்பட்டுள்ளது. இவரதுதந்தை பிடிஆர் பழனிவேல் ராஜன்சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சராக இருந்தவர். தாத்தா பி.டி.ராஜன், நீதிக் கட்சித் தலைவர், சென்னை மாகாண முதல்வராக இருந்தவர்.

பொதுப்பணித் துறையைபிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனத் துறை, துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றம், கனிமங்கள், சுரங்கத்துறையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாக பிரிப்பு

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு நகர்ப்புறவளர்ச்சித் துறை அளிக்கப்பட்டுள்ளது. 2006-11ல் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த கே.ஆர்.பெரியகருப்பனுக்கு ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 2 துறைகளும் இதுவரை ஒரே அமைச்சரின் பொறுப்பில் இருந்தது. முதல்முறையாக 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவு, புள்ளியியல், முன்னாள் ராணுவத்தினர் நலன் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடிக்கு கடந்த 2006-11ல் அவர் வகித்த உயர்கல்வி, அறிவியல், தொழில்நுட்பத் துறை மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-11ல் உணவு அமைச்சராக இருந்த எ.வ.வேலுவுக்கு பொதுப் பணி, சுகாதாரத் துறைஅமைச்சராக இருந்த எம்ஆர்கேபன்னீர்செல்வத்துக்கு விவசாயம், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைஅமைச்சராக இருந்த சாத்தூர் ராமச்சந்திரனுக்கு வருவாய், பேரிடர் மேலாண்மை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு தொழில், தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறைகளும், தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்த தா.மோ.அன்பரசனுக்கு ஊரகத் தொழில்கள், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த மு.பெ.சாமிநாதனுக்கு செய்தி, விளம்பரத் துறையும், கதர்த் துறை அமைச்சராக இருந்த க.ராமச்சந்திரனுக்கு வனம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

2006-11ல் சமூகநலத் துறை அமைச்சராக இருந்த கீதா ஜீவனுக்கு மீண்டும் அதே துறை ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மகளிர் உரிமைத் துறையின் பொறுப்பும் அவரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

15 பேர் புதுமுகங்கள்

15 புதுமுகங்களுக்கு வாய்ப்புதரப்பட்டுள்ளது. அர.சக்கரபாணி (உணவு நுகர்வோர் பாதுகாப்பு), ஆர்.காந்தி (கைத்தறி, துணிநூல்), மா.சுப்பிரமணியன் (சுகாதாரம்), பி.மூர்த்தி (வணிகவரி, பதிவு),எஸ்.எஸ்.சிவசங்கர் (பிற்படுத்தப்பட்டோர் நலன்), பி.கே.சேகர்பாபு (இந்து சமய அறநிலையம்), பிடிஆர்பழனிவேல் தியாகராஜன் (நிதி),சா.மு.நாசர் (பால்வளம்), செஞ்சிகே.எஸ்.மஸ்தான் (சிறுபான்மையினர் நலம், வெளிநாடுவாழ் தமிழர்நலன்), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (பள்ளிக்கல்வி), சிவ.வீ.மெய்யநாதன் (சுற்றுச்சூழல், இளைஞர் நலன், விளையாட்டு), சி.வி.கணேசன் (தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு), த.மனோ தங்கராஜ் (தகவல் தொழில்நுட்பம்), மா.மதிவேந்தன் (சுற்றுலா), என்.கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலன்) ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தலித் சமூகத்தில் 3 பேர், பெண்கள் 2 பேர், சிறுபான்மையினர் 4 பேர், வன்னியர், முக்குலத்தோர், நாடார், ரெட்டியார், நாயுடு, முத்தரையர், செட்டியார், முதலியார், வேளாளர், யாதவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று அனைத்துசமூகங்களுக்கும் அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது.

2 பெண்கள், 4 சிறுபான்மையினர்

ராசிபுரம் (தனி) தொகுதியில் வென்ற மா.மதிவேந்தன், தாராபுரம் (தனி) தொகுதியில் தமிழகபாஜக தலைவர் எல்.முருகனை தோற்கடித்த கயல்விழி செல்வராஜ், திட்டக்குடி (தனி) தொகுதியில் வென்ற சி.வி.கணேசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் உட்பட 34 பேர் கொண்ட அமைச்சரவையில் கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் ஆகிய இருவர் மட்டுமே பெண்கள்.கீதா ஜீவன், மனோ தங்கராஜ், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ஆவடிசா.மு.நாசர் ஆகிய 4 சிறுபான்மையினர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திமுகவுக்கு அதிக வெற்றியைக் கொடுத்த சென்னை, வடக்கு, மத்திய மண்டலங்களை சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த யாரும்அமைச்சரவையில் இடம்பெறவில்லை.

முன்னாள் அதிமுகவினர் 8 பேர்

அதிமுகவில் இருந்து விலகிதிமுகவில் இணைந்த 8 பேருக்குஅமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

எ.வ.வேலு (பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்), சாத்தூர் ராமச்சந்திரன் (வருவாய், பேரிடர் மேலாண்மை), வி.செந்தில் பாலாஜி (மின்சாரம்), ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் (போக்குவரத்து), சு.முத்துசாமி (வீட்டுவசதி), எஸ்.ரகுபதி (சட்டம், நீதிமன்றங்கள்), அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (மீன்வளம் கால்நடை), பி.கே.சேகர்பாபு (இந்து சமய அறநிலையம்) என்று முக்கிய துறைகள் அளிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x