Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM

பிரபல நடிகர் பாண்டு கரோனா தொற்றால் காலமானார் : மு.க.ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

பாண்டு

சென்னை

பிரபல குணச்சித்திர, நகைச்சுவை நடிகர் பாண்டு கரோனா தொற்றால் காலமானார். அவருக்கு வயது 74. பாண்டு மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, நடிகர் பாண்டு, அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாண்டு நேற்று அதிகாலை காலமானார். அவரது மனைவி குமுதா, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

‘கரையெல்லாம் செண்பகப்பூ’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாண்டு. ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘கடல் மீன்கள்’, ‘பணக்காரன்’, ‘நடிகன்’, ‘நாளைய தீர்ப்பு’, ‘ராவணன்’, ‘முத்து’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘ஏழையின் சிரிப்பில்’, ‘நினைவிருக்கும் வரை’, ‘நாட்டாமை’, ‘காதல் கோட்டை’, ‘வாலி’, ‘கில்லி’, ‘போக்கிரி’, ‘சிங்கம்’, ‘காஞ்சனா-2’ உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, சிறந்த நகைச்சுவை நடிகராக, குணசித்திர நடிகராக புகழ் பெற்றார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார்.

சிறந்த ஓவியராகவும் தன் திறமையை வெளிப்படுத்தியவர் பாண்டு. எழுத்துகள் வடிவமைக்கும் டிசைனராக விளங்கிய அவர் ‘கேபிட்டல் லெட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வந்தார். அந்த நிறுவனம் மூலம் பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள், நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.

சென்னை அடையாறில் வசித்துவந்த பாண்டுவுக்கு பிரபு, பஞ்சு, பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அடையாறில் உள்ள மயானத்தில் பாண்டு உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: தென்னிந்தியாவிலேயே ஓவிய ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரிய பாண்டு, நகைச்சுவையிலும் தனக்கென தனி பாணியை முத்திரையாக பதித்து புகழ்பெற்றவர். அவரது மறைவு திரையுலகுக்கு மட்டுமின்றி ஓவிய உலகுக்கும் பேரிழப்பு.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி: அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆருக்கு நன்கு அறிமுகமானவரும், கலையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவரும், குணச்சித்திர நடிகருமான பாண்டு கரோனா தொற்றால் காலமான செய்தி கேட்டு வருத்தமுற்றோம். பழகுவதற்கு இனிய பண்பாளரான பாண்டு. அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: சிறந்த நகைச்சுவை நடிகர், ஓவியக் கலைஞர் பாண்டு காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது மறைவு திரையுலகுக்கும், ஓவியத் துறைக்கும் பேரிழப்பு.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள் ளது.

இயக்குநரின் தந்தை மரணம்

திரைப்பட இயக்குநர் செல்வாவின் தந்தை பக்தவச்சலம் (85) நேற்று கரோனா தொற்றால் உயிரிழந்தார். ‘ஒருதலை ராகம்’ படத்தின் தயாரிப்பாளர் இப்ராஹிம் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x