Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM

கரோனா 2-வது அலை பெருந்தொற்றை சமாளிக்க - சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கரோனாவுக்கு எதிரான போரை சமாளிக்க ஏதுவாக சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரூ.50 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் சுகாதாரத் துறை கட்டமைப்பை வலுப்படுத்த முடியும் என ஆர்பிஐ கருதுகிறது.

கடந்த ஆண்டு தனி நபர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சலுகைகளை ஆர்பிஐ அறிவித்தது. தற்போது சிறு தொழில்நிறுவனங்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி ரூ.25 கோடி வரை கடன்உள்ள நிறுவனங்கள் தங்களது கடனை மறு சீரமைப்பு செய்துகொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்து வரும் சூழலில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் ஒருங்கிணைந்த வகையில் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதவிர மே 20-ம் தேதி ரூ.35 ஆயிரம் கோடிக்கு அரசு கடன் பத்திரங்களை வெளியிட உள்ளது. இவற்றுக்கு 6 சதவீத வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளின் பங்கு விலைகள் நேற்று அதிக விலைக்கு வர்த்தகமாயின.

சுகாதாரத் துறையில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு உதவும் விதமாக இந்தஅறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. இதுதவிர சிறு நிதி வங்கிகளுக்கு 4 சதவீத வட்டியில் ரூ.10 ஆயிரம் கோடி அளவில் மறு கடனுதவி வழங்கப்படும் எனஆர்பிஐ அறிவித்துள்ளது. இதுமூன்று ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்த கடன் தொகையானது முன்னுரிமை துறைகளுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறு நிதி வங்கிகள் மற்ற குறு நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஊக்குவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அதிகபட்சம் ரூ.25 லட்சம்வரை கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் தங்களது பண சுழற்சிக்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் திரும்பாக் கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையின் அளவை குறைத்து மறு கடன் மற்றும் கடன் சீரமைப்புக்கு அளிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x