Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

மக்கள் நன்மைக்காகவே புதிய கட்டுப்பாடுகள் - கரோனா பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

கரோனா பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றுதமிழக முதல்வராகப் பொறுப்பேற்கஉள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை, மக்கள் அனைவரும் கவனமாக கடைபிடிக்க வேண்டும். கரோனா 2-வது அலை, முதல் அலையைவிட மிக மோசமானதாக இருக்கிறது. அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த நிலையை மக்கள் முதலில் உணர வேண்டும்.

வடமாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் அச்சம் தருவதாக உள்ளன. அங்கு தினமும்நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் பதிவாகின்றன. இந்த நிலை தமிழகத்தில் ஏற்படாமல் இருக்க, மக்கள்அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதை மனதில் கொண்டுதமிழக அரசின் சார்பில் புதியகட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

கூட்டமாக நிற்பது, நெருங்கி நிற்பதை தவிர்க்கவும். அரசு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் மக்கள் நன்மைக்காகப் போடப்படுபவைதான் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும்சங்கிலியைத் துண்டிக்காமல் கரோனாவை ஒழிக்க முடியாது. அத்தகைய சங்கிலியைத் துண்டிக்கவே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசின் கட்டுப்பாடுகளை, மக்கள் தங்களுக்குத் தாங்களே போட்டுக் கொள்ளும் கட்டுப்பாடாக நினைக்க வேண்டும். இதை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட்டால் மட்டுமே, நம் பாதுகாப்பை உறுதி செய்ய இயலும்.

தொற்று பரவாமல் தடுத்தல், தொற்றுக்கு ஆளானவர்களைக் காப்பாற்றுதல் ஆகிய இரு குறிக்கோள்களைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. தொற்றுக்கு ஆளானவர்களைக் காப்பாற்றுதல் என்பது அரசின் பணி என்றால், நோய்பரவாமல் தடுத்தல் என்பது அரசுடன் மக்களும் சேர்ந்து ஆற்ற வேண்டிய பணியாகும்.

அவசர, அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதைதவிர்க்கவும். அப்படியே வெளியில்வந்தாலும் முகக் கவசம் அணியவும். பணியில் இருக்கும்போதும்முகக் கவசம் கட்டாயம். குளிர்சாதன அறைக்குள் இருப்பவர்கள் ஜன்னல்களைத் திறந்து வைத்திருப்பது அவசியம். கபசுரக் குடிநீர் அருந்துங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் ஏற்படுத்த காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தரமான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்

மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், டிஜிபி ஜே.கே.திரிபாதி, வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். மருத்துவ சிகிச்சை, படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு, விநியோகம் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார். மக்களுக்கு அவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். வரும் நாட்களில் சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தால், அதை சமாளிக்க தேவையான எண்ணிக்கையில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு, மருத்துவர்கள் இருப்பதை கண்காணித்து தரமான சிகிச்சை அளிக்குமாறும், இதை உறுதிசெய்ய கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை மாவட்டங்களுக்கு உடனே அனுப்புமாறும் அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x