Last Updated : 05 May, 2021 03:13 AM

 

Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

சட்டப்பேரவையில் பலமான எதிர்க்கட்சியாக அமர - அதிமுகவுக்கு கை கொடுத்த மேற்கு மண்டலம் :

கோவை

புதிய சட்டப்பேரவையில் பலமான எதிர்க்கட்சியாக அமர, அதிமுகவுக்கு மேற்கு மண்டல மாவட்டங்கள் கைகொடுத் துள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குஎண்ணிக்கையின்போது, தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அதிமுக முன்னிலைபெற்று, வென்ற தொகுதிகளில், பெரும்பாலானவை மேற்கு மண்டல மாவட்டங்களைச் சேர்ந்தவை. தமிழகத்தில் வடக்கு, தெற்கு, மத்திய மண்டலங்கள் பெரும்பாலும் திமுகவுக்கு கை கொடுக்கும். ஆனால், மேற்கு மண்டல மாவட்டங்கள் அதிமுகவுக்கு சாதகமாகவே இருந்து வருகின்றன. அந்நிலையே தற்போதைய தேர்தலிலும் தொடர்ந்துள்ளது.

தமிழகத்தின் மேற்கு மண்டலம் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்ஆகிய 8 மாவட்டங்களைக் கொண்டது.

இங்கு மொத்தம் 57 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. சேலத்தில் 11 தொகுதிகள், கோவையில் 10, திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தலா 8, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் தலா 6, தருமபுரியில் 5, நீலகிரியில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், திமுக - அதிமுக இடையே 36 தொகுதிகளில் நேரடி போட்டி நடந்தது.

மேற்கு மண்டல மாவட்டங்களில் உள்ளதொகுதிகளில் அதிமுக சார்பில் இணைஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கே.ஏ.செங்கோட்டையன், கருப்பணன், கே.பி.அன்பழகன், முன்னாள் பேரவைத் தலைவர் தனபால், முன்னாள் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிட்டனர்.

திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், மு.பெ.சாமிநாதன், க.ராமச்சந்திரன், முத்துசாமி உள்ளிட்டோரும், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் சார்பில் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஆதித்தமிழர் பேரவை அதியமான் உள்ளிட்டோரும், மநீம தலைவர் கமல்ஹாசன், பாமகவின் ஜி.கே.மணி, பாஜகவின் வானதி சீனிவா சன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் போட்டியிட்டனர்.

இதில், அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வெற்றிபெற்றுள்ளனர்.

சுப்புலட்சுமி ஜெகதீசன் தவிர, திமுகவின் முக்கிய வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

கோவையின் 10 தொகுதிகளையும், தருமபுரியின் 5 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி முழுமையாக கைப்பற்றியுள்ளது. சேலத்தில் 10, ஈரோட்டில் 5,நாமக்கல்லில் 2, திருப்பூரில் 5, கிருஷ்ணகிரியில் 3, நீலகியில் ஒன்றுஎன மேற்கு மண்டலத்தில் மட்டும்அதிமுக கூட்டணி 41 தொகுதிகளை கைப்பற்றியதன் மூலம் சட்டப்பேரவை யில் பலமான எதிர்க் கட்சியாக அதிமுக அமர வழிவகுத் துள்ளது.

திமுக, நீலகிரியில் 2, நாமக்கல் லில் 4, திருப்பூரில் 3, ஈரோட்டில் 3, சேலத்தில் 1, கிருஷ்ணகிரியில் 3 என 16 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

இதுதொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, ‘‘மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை எனப்படுவதைத் தகர்க்க, இங்கு அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு, திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண் டார். ஆனாலும், மேற்கு மண்டலத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியா தது அக்கட்சியினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக வேட்பாளர்களை எதிர்கொள் ளும் வகையில் தகுந்த வேட்பாளர்களை நிறுத்தாதது, நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் மீது தொகுதி மக்களுக்கு முன்னரே உள்ள அதிருப்தி, உட்கட்சிப் பூசல் போன்றவை இம்மண்டலத்தில் திமுக வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம். அதேபோல, கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் அதிமுகவால் இம்மண்டலத்துக்கு முக்கி யத்துவம் கொடுத்து நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள், கிராமப்புற பகுதி மக்களிடம் இன்னும் நீங்காத இரட்டை இலை சின்னத்தின் மீதான ஈர்ப்பு போன்றவை அதிமுக வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்.

இதற்கிடையே, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளைப் பிரித்ததும் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x