Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

‘தமிழ்மண்’ பதிப்பக உரிமையாளர் கோ.இளவழகன் காலமானார் : அரசியல் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் இரங்கல்

‘தமிழ்மண்’ பதிப்பக உரிமையாளர் கோ.இளவழகன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது (73).

அரிய தமிழ் இலக்கிய ஆய்வு நூல்களை வெளியிட்டு, தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் கோ.இளவழகன். தமிழ் அறிஞர்களின் படைப்புகளை ஒருசேர தொகுத்து காலவரிசையில் வெளியிட வேண்டும் என்ற லட்சியத்தோடு ‘தமிழ்மண்’ பதிப்பகத்தை தொடங்கினார். பாரதிதாசன், தேவநேயப் பாவாணர், சோமசுந்தர பாரதியார், அப்பாதுரை, மறைமலையடிகள், சாமி சிதம்பரனார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் முழு படைப்புகளையும் தொகுப்பு நூல்களாக வெளியிட்டார்.

1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற இளவழகன், தனித் தமிழில் பேசுவது, எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார். அண்ணாவின் சொற்பொழிவுகள், எழுத்துகளை 65 தொகுப்புகளாக கடந்த ஆண்டு வெளியிட்டார். பழந்தமிழ் நூல்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். பின்னர் அவரது உடல், சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கொண்டு செல்லப்பட்டு நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டது.இளவழகன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பைந்தமிழ் நூல்களை எல்லாம் தேடித் தேடி திரட்டிப் பதிப்பித்த பெரியவர் ‘தமிழ்மண்’ பதிப்பகம் கோ.இளவழகனார் மறைந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அண்ணாவின் நூல்கள் அனைத்தையும் திரட்டி, 100-க்கும் மேற்பட்ட நூல்களாக தொகுத்து அதை நான் வெளியிட வேண்டும் என்று என்னை சந்தித்து இளவழகன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 2019-ல் கலைஞர் அரங்கத்தில் நடந்த விழாவில் வெளியிட்டேன். இறுதி வரை தமிழ் நூல்களை பதிப்பதிலேயே குறிக்கோளாக இருந்த மகத்தான மனிதரை இழந்திருக்கிறோம்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: தமிழ் அறிஞர்களின் அனைத்து நூல்களையும் தேடிப் பிடித்து பதிப்பித்தவர் இளவழகன். அண்ணாவின் நூல்களை பல தொகுப்புகளாக வெளியிட்டவர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: தன் வாழ்நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான புத்தகங்களை பதிப்பித்து தமிழுக்கு தொண்டு செய்த செம்மல் இளவழகன். தமிழ் இன உணர்வாளர். ‘தமிழ்த் தொண்டே என் உயிர்’ என்று உழைத்து வாழ்ந்தவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன்: அரிய நூல்களை வெளியிட்டு தமிழுக்கு தொண்டு செய்தவர். இளம் தலைமுறையினரிடம் தமிழ் ஆர்வத்தை ஊட்டியவர். . பதிப்பகத்தை வியாபாரமாக கருதாமல் தமிழுக்கு செய்யும் தொண்டாக கருதியவர்.

தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்: தமிழ் மொழி, இனம், தாயகத்தின் உரிமைக்காக களமாடியவர். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு பேருதவியாக விளங்கியவர்.

முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன்: தமிழ் அறிஞர்களின் அரிய நூல்களை தேடித் திரட்டி தமிழுக்கு செழுமை ஊட்டிய இளவழகனின் தமிழ்ப் பணிகளை தமிழ் உலகம் என்றும் மறவாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x