Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

ஆட்சித் தேருக்கு அச்சாணியாக செயல்படுவோம் - அதிமுகவை கட்டிக் காக்க உறுதி ஏற்க வேண்டும் : தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை

தமிழகத்தில் ஆட்சித்தேர் சரியாகசெலுத்தப்படுவதை உறுதி செய்யும்அச்சாணியாக செயல்படுவோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் நேற்று கூட்டாகவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் இதயமார்ந்தநன்றி. தொடர்ந்து 10 ஆண்டுகாலம் நடந்த அதிமுக அரசு, தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஆற்றியிருக்கும் அரும்பணிகளை மக்கள் நன்கு அறிவர். நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளும் கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித்தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாகவும் செயல்பட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தமிழக சட்டப்பேரவையிலும் ஆட்சிநிர்வாகத்திலும் எதிர்க்கட்சி என்னும்பெரும் பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அவை அனைத்தையும் மனத்தூய்மையுடனும், அதிமுகவின் கொள்கைவழி நின்றும் செவ்வனே நிறைவேற்றுவோம்.

இரவு, பகல் பாராது தேர்தல் பணியாற்றிய அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், முழுமையாக உழைத்த கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்டு ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி இருக்கும் அதிமுக, தொடர்ந்து மக்கள் பணிகளை ஆற்றுவதற்கும், கட்சியைக் கட்டிக் காக்கும் கடமையில் தோளோடு தோள் நின்று உழைப்பதற்கும் கட்சி தொண்டர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, ‘‘புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். மேலும், தொலைபேசியில் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டும் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு என் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு ட்விட்டர் பக்கத்திலேயே பதில் அளித்துள்ள மு.க. ஸ்டாலின்,‘‘ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, வாழ்த்து தெரிவித்த பழனிசாமிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x