Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

முதல்வர் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார் : வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் நம்பிக்கை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு மு.க.ஸ்டாலின் நேற்று வந்தார். அவரை திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், வைகோ, திருமாவளவன், இரா.முத்தரசன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். தமிழகம் இன்று சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிற கரோனா கொடுமையை எதிர்த்து ஒரு மகத்தான போராட்டத்தை நடத்தி, இந்த கொடுமையில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் காரியத்தில் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் நிச்சயம் ஈடுபடுவார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: நிதி நெருக்கடி போன்ற பல்வேறு நெருக்கடியான காலகட்டத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார். தாம் அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்று உறுதி அளித்துள்ளார். அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொண்டு அவை அனைத்தையும் சமாளித்து மிகச்சிறந்த ஒரு நல்லாட்சியைத் தருவதோடு, ஆட்சி மாற்றம் வேண்டும், நல்லாட்சி வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய முறையில் மு.க.ஸ்டாலின் செயல்படுவார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: இந்தியாவில் இருக்கும் மற்ற முதல்வர்கள் எல்லாம் தமிழகத்துக்கு வந்து தமிழக முதல்வர் தலைமையில் இயங்கக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. மு.க.ஸ்டாலின் கவனம் எல்லாம் கரோனா பற்றிதான் இருக்கிறது. தேர்தலில் தோற்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் முந்தைய அரசு அலட்சியமாக இருந்தது. எனவே, கரோனா என்ற கொடிய விபத்தில் இருந்து தமிழக மக்களை விடுவிப்பது, பாதுகாப்பது எப்படி என்பதிலேதான் மு.க.ஸ்டாலின் முழு கவனத்துடன் இருக்கிறார். அதில் அவர் நிச்சயம் வெல்வார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 3 பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர். அவர்களின் மதவாத, வெறுப்பு அரசியல், சதி அரசியல் இந்த மாநிலங்களில் எடுபடவில்லை. தமிழகம் சமூக நீதி மண், பெரியார் மண் என்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின், கருணாநிதியைப் போல ராஜதந்திரத்தில் வல்லவர், ஆளுமை மிக்கவர். கரோனா இழப்பீட்டு்த் தொகை ரூ.4 ஆயிரம் அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். அத்திட்டத்துக்கு முதல் கையெழுத்துப் போடுவது உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றி நல்லாட்சி நடத்துவார் என நம்புகிறோம். தமிழகத்தில் பாஜக வெற்றி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x