Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு உருவான - சூலூர், கவுண்டம்பாளையத்தில் அனைத்து தேர்தல்களிலும் வென்ற அதிமுக :

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு உருவான சூலூர் தொகுதியில் அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்று முத்திரை பதித்துள்ளது.

கோவை மாவட்டத்தின் ஒரு பகுதி நுழைவுவாயிலாக அமைந்துள்ளது சூலூர் தொகுதி. கடந்த 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலின்போது சூலூர், திருப்பூர் தொகுதியின் கீழ் இருந்தது. பிறகு 1957-ம் ஆண்டு ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் சூலூர்தனித் தொகுதியாக உருவாக்கப் பட்டது. 1957, 1962-ம் ஆண்டுகளில் தேர்தல்களை சந்தித்த நிலையில், 1967-ம் ஆண்டு முதல் சூலூர் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டது.

பிறகு 2009-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, மீண்டும் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியாக இருந்த தேமுதிக வேட்பாளர் தினகரன் வெற்றி பெற்றார். தற்போதைய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் இரண்டாம் இடத்தை பெற்றார்.

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆர்.கனகராஜ்வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வி.எம்.சி.மனோகரன் 2-ம் இடம் பெற்றார்.

தொடர்ந்து, ஆர்.கனகராஜ் உயிரிழந்ததால், கடந்த 2019-ம்ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.பி.கந்தசாமி ஒரு லட்சத்து 782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரைஎதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி தோல்வியடைந் தார். இந்நிலையில், 2021-ம் ஆண்டுதேர்தலிலும் வி.பி.கந்தசாமிக்கு அதிமுக தலைமை சூலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தது. திமுக கூட்டணியில் கொமதேக சார்பில் ப்ரீமியர் செல்வம் (எ)காளிசாமிவேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

தேர்தல் முடிவில் வி.பி.கந்தசாமி ஒரு லட்சத்து 18,968 வாக்குகளுடன் கொமதேக வேட்பாளரை விட 31,932 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலமாக மறுசீரமைப்புக்குப் பிறகு உருவாக்கப்பட்ட தொகுதி அடிப்படையில் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கவுண்டம்பாளையம்

தமிழகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட பெரிய தொகுதிகளில் கவுண்டம்பாளையம் தொகுதியும் ஒன்று. தொகுதி மறுசீர மைப்பின்போது தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு இத்தொகுதி உருவாக்கப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் வி.சி.ஆறுக்குட்டி, திமுக சார்பில் டி.பி.சுப்ரமணியம் போட்டியிட்டனர் . இதில், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 58 வாக்குகளை பெற்று வி.சி.ஆறுக்குட்டி வெற்றி பெற்றார். டி.பி.சுப்ரமணியம் 67,798 வாக்கு கள் பெற்றார்.

தொடர்ந்து 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் மீண்டும் வி.சி.ஆறுக்குட்டியும், திமுக சார்பில் பையா என்ற ஆர்.கிருஷ்ணனும் போட்டியிட்டனர். இதில் வி.சி.ஆறுக்குட்டி ஒரு லட்சத்து 10,870 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆர்.கிருஷ்ணனுக்கு ஒரு லட்சத்து 2,845 வாக்குகள் கிடைத்தன.

இந்நிலையில், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் ஆர்.கிருஷ்ணனுக்கே மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. அதிமுக சார்பில் பி.ஆர்.ஜி.அருண்குமார் போட்டியிட்டார். இதில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். இதன்மூலம் கவுண்டம்பாளையம் தொகுதி சந்தித்த 3 தேர்தல்களிலும் அதிமுக ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x