Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

தமிழகம் முழுவதும் - தினசரி கரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கியது : முதியவர்கள் உட்பட 122 பேர் உயிரிழப்பு

சென்னை

தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியது. முதியவர்கள் உட்பட 122 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று ஆண்கள் 12,345 பேர், பெண்கள் 8,607 பேர் என மொத்தம் 20,952 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 6,150 பேர், செங்கல்பட்டில் 1,618, கோவையில் 1,566, திருவள்ளூரில் 1,207 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 28 ஆயிரத்து 64-ஆக அதிகரித்துள்ளது.

11 லட்சம் பேர் குணமடைந்தனர்

இதுவரை சென்னையில் 3 லட்சத்து 14,617 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 10 லட்சத்து 90,338 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 5,384 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 18,016 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர்.

சென்னையில் 32,785 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 23,258பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 122 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 38 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,468-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,858 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 3 லட்சத்து 52,260, செங்கல்பட்டில் 84,638, கோவையில் 82,689, திருவள்ளூரில் 62,504 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 265 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 2 கோடியே 30 லட்சத்து 97,963 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 41,021 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x